« Home | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் » | இந்தியா - புலிகள் » | நன்றி » | நடப்புகள் பற்றி »

இலங்கை - இன்றைய நிலை-1

இலங்கைத் தீவு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது?
நாலு வருடங்களாக இழுபட்டுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் யார் பலமாக இருக்கின்றனர்? பலமென்பது அரசியல், இராணுவம் என்றளவில் பார்த்தால் வேறு வேறு விடைகள் கிடைக்கலாம். யார் இப்போது யுத்தத்தைத் தொடங்கத் தயாராக இருக்கிறார்கள்? யார் யுத்தத்தைத் தவிர்க்க நினைக்கிறார்கள்?

இருவாரங்களுக்கு முன்புவரை, அரசாங்கம் யுத்தத்துக்குத் தயாராகவும் எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவும் இருப்பதாக தோற்றமொன்று இருந்தது. ஆகவே அரசு யுத்தத்தைத் தொடங்க காரணிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகப் பட்டது. புலிகள் எப்போதும் தாம் தாயராகவே இருப்பதாகச் சொல்லி வந்தாலும் பொதுப்பார்வையில் அவர்கள் யுத்தத்துக்குத் தயாரில்லை என்பது போன்ற தோற்றமே இருந்தது.

ஆனால் கடந்த இருவாரத்தில் நிலமை தலைகீழாக மாற்றமடைந்து விட்டதாகவே படுகிறது. இன்றைய நிலையில் எப்பாடு பட்டாவது அரசு ஒரு யுத்தத்தைத் தவிர்ப்பதையை விரும்புகிறது. அண்மையில் நடந்த இராணுவத் தளபதிமீதான தற்கொலைத்தாக்குதலைத் தொடர்ந்து அரசு பதிலடித்தாக்குதல் ஏதுமே நடத்தவில்லை.

இதற்கான காரணங்கள் எவை?

சிறிலங்கா அரசு, தான் அரசியல் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருப்பதாகவே கருதிக்கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் புலிகளைத் தடை செய்த நிலையில் இன்னும் தனது மேலோங்கிய தன்மையை ஒறுதிசெய்துகொண்டது. இதற்கிடையில் படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அது பெரிய பிரச்சினையாகக் கருதவில்லை. ஏனென்றால் அது உயர்மட்டத்தைப் பாதித்ததில்லை. மாறாக அவற்றை வெளியுலகில் பிரச்சாரம் செய்து தனக்குச் சாதகமாகவும் புலிகளுக்குப் பாதகமாகவும் மாற்றிக்கொண்டது. இந்திநிலையில் தனது ஆயுதபலத்தையும் சர்வதேச பலத்தையும் பெருமளவில் நம்பிக்கொண்டு ஒரு யுத்தத்தைத் தொடக்கி புலிகளை அழித்துவிட அது தயாராகவே இருந்தது. ஆனாலும் தானாக யுத்தத்தைத் தொடக்கின அவப்பெயரைத் தவிர்க்கவே அது விரும்பியது.

அத்தோடு புலிகள் மீதும், புலிகள் பகுதி மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் இன்னும் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டது. புலிகளின் தளபதிகள் இருவருட்பட மேலும் சிலரைக் கொன்றதுடன், புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடுமையான ஊடுருவல் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது அரசு. ஆனால் புலிகள் இப்படியான சிக்கல்களை கையாளும் முறை வேறு.

அடுத்ததாக, வளர்ந்து வரும் பொருளாதாரமும் அரசுக்கு நம்பிக்கையூட்டியது. பொருளாதாரத்தைச் சிதைக்கத்தக்க தாக்குதல்களைப் புலிகள் இப்போதைக்கு நடத்த மாட்டார்கள் என்ற எண்ணமும் அரசுக்கு இருந்தது. உலகநாடுகளுக்குப் பயந்து அல்லது பணிந்து அவர்கள் இப்படியான தாக்குதல்களைத் தவிர்ப்பர் என்பதே அரசினது (உலகத்தினதும்) கணிப்பு.

அடுத்து, ஆங்காங்கே நடந்த தாக்குதல்களைச் சாட்டாக வைத்து, புலிகளின் விமான ஓடுபாதை மீது தாக்குதல் நடத்தியது அரசு. அதன்மூலமும் புலிகளை உடனடியாக யுத்தத்தை எதிர்கொள்ள முடியாதவர்களாக மாற்றிக்கொண்டதாக நம்பியது அரசு.

இருவாரங்களுக்கு முன்புவரை திமிராக, ஆணவமாக நடந்து கொண்ட அரசு சடாரென்று பணிந்து போனதாகப்பட்டது. புலிகளுக்கு உதயன் வித்தியாதரன் மூலம் நேரடியாகப்பேசுவோம் என்று மகிந்த செய்தி அனுப்பினார். இரண்டு வாரங்கள் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்போம் என்று சொன்னார். கருணா குழுவை தான் கட்டுப்படுத்துவதாகவும், அந்நிலையில் புலிகள் தாக்குதல்களை நிறுத்துவார்களா என்றும் கேட்டார். எதிர்பார்க்கப்பட்டது போல் புலிகளிடமிருந்து மறுப்பு வந்திருக்கிறது. ஆனால் மகிந்த இப்படி ஓர் அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணங்கள் எவை?


இப்போது ஒரு யுத்தத்தை எதிர்கொள்ள முடியாது என்ற நிலையை மகிந்த தெளிவாக உணர்ந்து கொண்டார். எப்படி?
அண்மையில் தொடராக நடந்த சில சம்பவங்களைக் கவனித்தால் அது புரியும்.

1.கொழும்புப் பாதுகாப்பு.

கொழும்புத் துறைமுகத்துக்கு மிகஅண்மையில் உள்ள வத்தளை என்ற பகுதியில் விடுதலைப்புலிவீரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளை இருவரும் சயனைட் உட்கொண்டனர். ஆனால் மருத்துவமனையில் இருவரும் காப்பற்றப்பட்டனர். தொடர்ந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அதேநேரம் கடலில் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியுடன் வெடிமருந்துத் தொகுதியும் நீரடி நீச்சல் உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட குண்டுகள் நீரடியில் கடற்கலங்களின் அடியில் பொருத்தி வெடிக்கவைக்கும் சக்தி வாய்ந்த குண்டுகள்.

இவற்றிற்கிடையிலும்கூட அரசதரப்பிலிருந்து விழுந்தடித்து அறிக்கை விட்டது. "இவர்களின் தாக்குதல் இலக்கு கொழும்புத் துறைமுகம் இல்லை, வேறு இலக்குகள் தாம்" என்று அவசரமாகச் சொல்லப்பட்டது. ஆனால்இலங்கைப் புவிவியல் நன்கு தெரிந்தவர்களுக்கு இலக்கு எதுவென்பது தெரியும். கொழும்பில் சிறுபிள்ளைகூட இக்கூற்றை நம்பப்போவதில்லை. ஆனாலும் அரசு ஏன் அப்பிடி முந்திக்கொண்டது? பொருளாதாரம்தான் காரணம். கொழும்புத்துறைமுகத்துக்கு ஆபத்து என்ற தகவல் வெளியானால் நிச்சயம் இலங்கைப் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். உல்லாசப்பிரயாணமும் கணிசமாகப் பாதிக்கப்படும்.
இந்த ஒரு சம்பவத்துக்குப்பின்பும் தொடராக பல நடந்துவிட்டன. நீர்கொழும்பு உட்பட சில பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைக்குரிய பல தடயங்கள் பிடிபட்டன. படகுகள், ஆயுதங்கள், வெடிபொருட்தொகுதிகள் என்று கைப்பற்றப்பட்டன. இவற்றில் முக்கியமானது, இதில் பல சிங்களவர்களும் சம்பந்தப்பட்டதென்பது தான்.

அரசு இயன்றவரை இச்சம்பவங்களை மறைக்க, அல்லது குறைந்த முக்கியத்துவம் கொடுக்கவே முற்பட்டது. ஐக்கியதேசியக் கட்சி செல்வாக்குள்ள ஊடகங்கள் மூலமே இவை பெரிதுபடுத்தப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இவையெல்லாம் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிட்டன. கொழும்பில் பாரிய தாக்குதலுக்கான திட்டத்துடன் பலர் காத்திருக்கிறார்கள் என்பதே அது. அதுமட்டுமன்றி தம்மால் கைப்பற்றப்பட்டவை, இனங்காணப்பட்ட தொடர்புகள் என்பவை மிகச்சிறிய அளவிலானதே என்பதும் அரசுக்குப் புரிந்துள்ளது. கொழும்பைக் காப்பாற்றுவதும், அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதும் அவ்வளவு சுலபமில்லை என்பது புலனாகிவிட்டது. இந்நிலையில் அமைச்சரொருவர், 'வன்னியைவிட கொழும்பில் தான் புலிகள் அதிகமாக உள்ளனர்' என்றார்.

2.புலிகளின் ஊடுருவல்கள்

இதைவிட அடுத்த முக்கிய விசயம், புலிகளின் ஊடுருவல்.
சிறிலங்காப் படைப்பிரிவிற்குள் நடந்த ஊடுருவலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் 28 படைத்துறை சார்ந்தவர்களும் இவ்வாறு இனங்காணப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றிலுள்ள உண்மை பொய்களுக்கப்பால், சிறிலங்காப் படைத்துறைக்குள்ளும் புலனாய்வு அமைப்புக்குள்ளும் புலிகளின் கையாட்கள் இருப்பதை மறுப்பது அவ்வளவு சுலபமில்லை. உண்மையில் தேர்ச்சியான, ஆழ ஊடுருவல்கள் பிடிபடாமல் இருக்க, மேம்போக்கான ஊடுருவல்களே பிடிபடுகின்றன என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

சரத் பொன்சேகா மீதான தாக்குதல் தொடக்கம் அண்மையில் நடந்து முடிந்த பரமி குலதுங்க மீதான தாக்குதல் வரை, உட்தொடர்புகள் இல்லாமல் இவை நடந்திருக்கச் சாத்தியமில்லை என்ற அளவுக்கு அரசு சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

3.அரசுக்கு எதிராக சிங்களவர்கள்
இதுவும் புலிகளின் ஊடுருவல் என்ற தலைப்பின் கீழ் வரக்கூடியது. படைத்தரப்புக்குள் பலரை தமது கையாட்களாக மாற்றியமைத்த புலிகள் சாதாரண சிங்கள மக்களிடமும் அவ்வாறான வேலையைச் செய்துள்ளனர். பல சிங்களவர்கள் புலிகளின் கையாட்களாக இருக்கக்கூடிய அபாயத்தை அரசு உணர்ந்துள்ளது. உண்மையில் "புலனாய்வாளர் முத்தலிப்பின்" கொலையின் போதே இவ்வாறான சிங்களத் தொடர்புகள் வெளிவந்துவிட்டன. விசாரணைகள் சிங்களவர்களைநோக்கிய முடிந்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். எனினும் இதுவொரு புறநடை என்று நினைத்திருக்கலாம். இப்போது வத்தளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட விசாரணைகளில் மேலும் சிங்களவர்களின் தொடர்புகள் தெரியவந்துள்ளன.
இந்நிலையில் புலிகளை எப்பக்கத்தால் எதிர்கொள்வதென்பது அரசுக்குப் பெரிய பிரச்சினைதான்.

4. மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம்
முன்னர் மன்னாரில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டனவாகவே இருந்தன. முக்கிய போர்முனையாகவோ கடற்படைத்தளமாகவோ புலிகள் மன்னாரைப் பாவிக்கவில்லை. இப்போது நடந்துள்ள சில சமர்கள் மன்னர் மற்றும் புத்தளக் கடலில் கடற்புலிகளின் பலத்தைச் சொல்கின்றன. நடந்த சண்டைகளில் கடற்புலிகளே வெற்றிபெற்றுள்ளார்கள்.
மன்னாரில் கடற்புலிகளின் ஆதிக்கம் அதிகரிப்பது பற்றி தனியொரு கட்டுரையில் பார்ப்போம்.
மன்னார்க்கடலில் இவர்களின் ஆதிக்கம் கொழும்பு, நீர்கொழும்பு உட்பட தென்பகுதிக்கு மிக ஆபத்தானது என்பதை அரசு உணர்ந்துள்ளது.
இப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதன் மூலம் திருகோணமலையின் பாதுகாப்பு குறைவடையும் சாத்தியமுள்ளது. இது திருகோணமலையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்.
திருகோணமலை மீது புலிகளுக்கிருக்கும் வேட்கையும், அதைக் கைப்பற்றுவது ஏறத்தாழ போராட்டத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்குச் சமனென்பதும் தெரிந்ததே.
திருகோணமலையின் அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றி தமிழ்சசி எழுதியிருக்கிறார்.

சசியின் டைரி: சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 4

5. புலிகள் சர்வதேச அழுத்தத்துக்குப் பணியாமை.
கொழும்புப் பாதுகாப்பு சிங்கள அரசு அதிகம் நம்பியிருந்தது சர்வதேசத்தைத்தான். அவர்களின் வெருட்டல்களைத் தாண்டி புலிகள் கொழும்பைத் தாக்க மாட்டார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை (சர்வதேசத்தின் நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது) அந்த நம்பிக்கையிலேயே அவர்கள் துணிவாகச் சில காரியங்களில் இறங்கினார்கள்.
ஆனால் புலிகள் தமது வழியிலேயே அரசுக்குப் பதிலளித்தார்கள். அதாவது சர்வதேச அழுத்தங்களோ தடைகளோ கொழும்பைக் காப்பாற்றாது என்பதே அது. முக்கியமான தருணத்தில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. புலிகள் தவிர அனைவருக்கும் அதிர்ச்சிதான். சர்வதேசத்துக்குப் பயந்து கொழும்பு தாக்கப்படாது என்று திமிராக இருந்த அரசுக்கு அதுவொரு முக்கிய செய்தி.
_________________________________________________________________________

மேற்கூறிய சில காரணிகளினால் அரசு யுத்தமொன்றை எதிர்கொள்வதை விரும்பவில்ல. தன்னால் யுத்தத்தை எதிர்கொள்ள முடியாதென்பது அரசுக்கு நன்கு தெரிந்துவிட்டது.

இந்தநிலையில்தான் அவசரஅவசரமாக உதயன், சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் ஊடாக புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் மகிந்த. இருவாரங்களுக்கு ஒரு யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, பின் மேற்கொண்டு நேரடியாகப் பேசுவோம் என்பது அதன் சாராம்சம். ஆனால் கொழும்பைத் தாக்கக்கூடாது என்பதே அவரின் முக்கிய வேண்டுகோளாக இருந்திருக்கும். கருணா குழுவை தன்னால் கட்டுப்படுத்த முடியுமென்று ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தையும் அளித்துள்ளார்.
அதில நகைப்புக்கிடமான விடயமென்னவென்றால், தான் இராணுவத்தோடு சம்பந்தப்படாதவன் என்ற பாணியில் மகிந்த பேசியிருப்பது தான். "இராணுவமும் புலிகளும் யுத்தத்துக்குத் தயார்படுத்துகின்றனர்; தான் இருவருக்குமிடையில் சிக்கி பாடுபடுகின்றேன் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது இலங்கையின் இராணுவ ,அரசியல் நிலை எப்பிடி இருக்கிறது?
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டபோது இருந்த இராணுவச் சமநிலையை அண்மித்ததாக இருக்கிறது. அதாவது புலிகளின் கை ஓங்கியிருக்கிறது. பலமென்பது எதை வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை. மாறாக எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்ததே. புலிகள் இப்போதுள்ளதைப் போன்றுதான் ஒரு மாதத்தின் முன்பும் இருந்தார்கள். ஆனால் வெளிப்பார்வைக்கு அரசு பலவானாகவும் புலிகள் ஒப்பீட்டளவில் பலமற்றவர்களாகவும் தெரிந்தார்கள்.
இரு வாரத்துள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புலிகள் எதையும் புதிதாகப் பெற்றுக்கொள்ளவில்லை. சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.



அரசு யுத்தத்துக்குத் தயாரில்லையென்பதற்கு இன்னொரு வலுவான
வெளிப்பாடு உள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட பரமி குலதுங்க மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தவொரு எதிர்வினையும் அரசதரப்பால் நடத்தப்படவில்லை. தொட்டதுக்கெல்லாம் விமானத்தாக்குதலும் எறிகணைத் தாக்குதலும் நடத்திய அரசு ஏன்
இத்தாக்குதலுக்கு மெளனம் சாதித்தது என்பது முக்கிய கேள்வி. உண்மையில் அரசு தாக்குதல் நடத்தாதது புலிகளுக்கு ஏமாற்றமே. இதுபற்றி இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்.


இனிவரும் காலம் சமாதானத்துக்கான காலமன்று, யுத்தத்துக்கான காலமென்பதையே நடக்கும் நிகழ்வுகள் தெளிவாகச் சொல்கின்றன.

தங்களின் திறனாய்வு மிக அருமை. நானும் சிந்தித்தேன் அரசு ஏன் இந்த முறை பதில் தாக்குதல்கைள நடத்தவில்லை என்று. எனக்கும் நீங்கள் கூறியதுபோல்தான் பட்டது. ஆனால்.... இதற்கு எதிர்வினையாக பொழும்பிலுள்ள தமிழர்கள் மீது காடையர்களால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடலாம் என்றுதான் சிந்திக்கின்றேன். ஒரு சிங்கள நண்பர் சொன்னார். 83ம் இப்படித்தான் இருந்தது என்று. நான் சொன்னேன்.. இப்போது தமிழர்கள் 83மாதிரி இல்லை. தாக்கினால் திருப்பி தாக்குவார்கள் என்று.. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

நன்றி.

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
தொடர்ந்தும் சில விசயங்கள் எழுதுவேன்.

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
தங்கத் தலைவனின் காலத்தில் ஈழம் மலரும்
அடிமை விலங்கொடியும்.

புதியவன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதியவன்.
இது கொஞ்சம் அறிவுபூர்வமான பதிவு. உணர்ச்சி வசப்பட வேண்டாமே.

Post a Comment