October 17, 2006

உலகம் கோமாளிகளின் கையில்

எங்கயடா இன்னும் ஒருத்தனும் கண்டிக்கக் காணேல எண்டு ஆச்சரியத்தோட காத்திருந்தன்.
அதுக்கு முடிவுகட்டி அமெரிக்காவும் ஐநாவும் கண்டன அறிக்கை விட்டிருக்கினம்.

நேற்று திங்கட்கிழமை (16.10.2006) அன்று சிறிலங்காவில் ஹபரணை என்ற இடத்தில் சிங்களக் கடற்படை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூறு கடற்படையினர் வரை கொல்லப்பட்ட சம்பவத்துக்குத்தான் கண்டிக்கினமாம்.
இதில் கண்டிக்க என்ன இருக்கு என்று கண்டித்தவர்களுக்குத் தெரியுமோ என்னவோ? எல்லாம் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் அறிக்கையில் சம்பவத்தை மட்டும் செருகி அறிக்கை வெளியிடுவதுதான் இவர்கள் வேலை.

இத்தாக்குதலில் என்ன தவறு?, இதைச் செய்வதற்கு இருக்கும் தடை என்ன? இதில் கண்டிக்க என்ன இருக்கு? போன்ற கேள்விகளைக் கேட்டால் விளக்கம் தர சம்பந்தப்பட்ட 'கண்டிப்பாளர்கள்' முன்வரப்போவதில்லை.

பல பத்துத் தடவைகள் பறப்புக்கள் மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான குண்டுகளைத் தமிழர்மேல் பொழிந்து, பொதுமக்களிலேயே நூற்றுக்குமதிகமானவர்களைக் கொன்று குவித்துள்ளது சிறிலங்கா அரசு. பல கோடி ரூபாக்கள் பெறுமதியான தமிழரின் சொத்துக்களை நாசமாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கானோரை இடம்பெயர வைத்துள்ளது.
இதைவிட வலிந்த நில ஆக்கிரமிப்புக்களை நடத்தியுள்ளது.
இவ்வளவும் சமாதானப் பேச்சுவார்த்தை என்று பூச்சாண்டிகாட்டிக்கொண்டுதான்.

போர்க்களத்தைத் தாண்டிய அரசபயங்கரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், சிறிலங்கா அரசபடைமீது நடத்தப்பட்ட இராணுவத்தாக்குதலுக்கு கண்டன அறிக்கை விடுவது எவ்வளவு வேடிக்கை? இதிலென்ன பயங்கரவாதத்தைக் கண்டார்கள்?
ஹபரணை மட்டுமன்றி இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தும் 'தார்மீக நியாயத்தை'ப் புலிகள் பெற்றுள்ளார்கள். இதை எந்தக் கொம்பனும் அல்லது கோமாளியும் மறுக்க முடியாது. அரசவான்படையின் தாக்குதல்களை ஏற்றுக்கொண்ட எவனுக்கும் இப்படியான தாக்குதல்களைக் கண்டிக்க துளியும் அருகதையில்லை. அதுவும் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதலைக் கண்டிக்க எள்ளளவும் அருகதையில்லை.
இதில் எந்தப் பயங்கரவாதமுமில்லை.

இராணுவ இலக்குகள் தாக்கப்படும்போது ஏன் இந்தக் கோமாளிகள் துள்ளுகிறார்கள் என்று புரியவில்லை.
ஐநா சபையின் செயலாளர் நாயகம்கூட இந்தக்கோமாளிக்கும்பலின் முதன்மையாள் என்பது உறைக்கும் உண்மை.

இந்தக் கோமாளிகளின் கையில் உலகம்.
இவர்கள் வரிசையில் ஹபரணைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்னும் சில கோமாளிகள் பட்டியலில் இணைவார்கள் என்று நம்புவோமாக.