« Home | எல்லாளன் நடவடிக்கை » | உலகம் கோமாளிகளின் கையில் » | சம்பூரும் தமிழர் போராட்டமும் » | மாவிலாறு: ஈழப்போராட்டத்தின் தடைநீக்கி » | புலிகளின் புதிய வளர்ச்சி. » | சிங்கள அரசின் படுதோல்வியான தாக்குதல் » | கொழும்புத் தாக்குதலும் சம்பந்தப்பட்டவையும். » | மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம் » | இலங்கை - இன்றைய நிலை-1 » | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் »

புலி பாய்வது எப்போது?

இந்தக் கேள்வி பெரும்பாலும் எல்லோரிடமும் இருக்கிறது. புலிசார்பாளர்களிடம் மட்டுமல்ல; புலியெதிர்ப்புத் தரப்பிலும் இதுதான் கேள்வி. சிங்களத்தரப்பிலும், ஏன் பிராந்தியத் தரப்பிலும் இதுவொரு முக்கிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.


புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் தகுந்த போரனுபவம் பெற எடுக்கும் காலமே 'களநிலைமையில்' வலிந்த தாக்குதலைத் தொடங்குவதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி.

புலி பதுங்குகிறது; இடையிடையே பாய்கிறது. இறுதியாக அனுராதபுரத்தில் பாய்ந்தது. அனால் இங்கு எல்லோரிடமுமுள்ள கேள்வி, புலி எப்போது இராணுவ நிலைகளைத் தாக்கி நிலமீட்புச் சமரை நடத்தப்போகிறது என்பதே.

நிலமீட்புச் சமரை நடத்துவதற்கான அரசியல், இராணுவக் களச்சூழல் இன்னும் கனியவில்லையென்றுதான் தோன்றுகிறது.

அதற்கு முன்னர் சற்றுப் பின்னோக்கிச் சென்று ஒரு மீள்பார்வை செய்வது நன்று.

இற்றைக்கு ஒன்றேகால் வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இப்போதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் கடந்த வருடம் ஆவணி 11 இல் புலிகள் முகமாலை, கிளாலி அச்சில் வலிந்த போர் தொடுப்பதற்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. அந்த வலிந்த சமர்வரை புலிகள் பக்கமே சாதகங்கள் அதிகமிருந்தன. புலிகளின் கையே ஒங்கியிருந்தது. முன்னாள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர்கூட 'புலிகள் மிகுந்த தேர்ச்சி பெற்ற வீர்களைக் கொண்டு, யுத்தத்தை எதிர்கொள்ளும் மனநிலையில் உள்ளபோதும் அரசபடையினர் தரப்பில் யுத்தத்தை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை' எனத் தெரிவித்திருந்தார். அந்த ஆவணிச்சமரின்பின் நிலைமை தலைகீழாக மாறியது உண்மை. அந்தத் தாக்குதல்முயற்சி மட்டும் புலிகள் நினைத்ததுபோல் நடந்திருந்தால் இன்று கிழக்கு முழுவதும் விடுபட்டிருக்காது, இராணுவ - அரசியல் சூழ்நிலைகளில் தமிழர் தரப்பின் நிலையே வேறாக இருந்திருக்கும்.

ஆனால் அவசர குடுக்கைத்தனமோ, அல்லது தம்மீதான அதீத நம்பிக்கையும் எதிரிமீதான குறைந்த மதிப்பீடுமோ, அச்சமர் தோல்வியில் முடிவடைந்ததோடு புலிகளைச் சடுதியாகப் பாதித்தது. ஏறத்தாழ 350 க்கும் அதிகமான போராளிகள் கொல்லப்பட்டதோடு 800 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிறிலங்கா இராணுவத்தரப்பிலும் இதேயளவு அல்லது இதைவிட அதிகளவு இழப்பு ஏற்பட்டபோதும், புலிகளுக்கு இது மாபெரும் பின்னடைவே. பெருந்தொகையில் போராளிகளை இழந்தும், பேரளவான ஆயுத வெடிபொருட்களைப் பயன்படுத்தியும் எதுவித சாதகமான பெறுபேறும் கிடைக்கவில்லை. எதிரியிடம் போராளிகளின் உடல்கள் விடுபடக்கூடாது என்பதற்காகவே பெரும் சண்டைகளைச் செய்தபோதும் அச்சமரில் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் எதிரியிடம் கைவிடப்பட்டமையானது சண்டையில் என்ன நடந்திருக்குமென்பதைக் காட்டுகிறது. தரையில் குறிப்பிடத்தக்க முறையில் எதுவும் நடக்காததால் புலிகளின் விமானப்படைபற்றிய உளவியல் யுத்தம்கூட பிசுபிசத்துப் போய் கேலிக்கூத்தானது.

ஆனால் அந்தச்சமர் புலிகளால் தொடங்கப்படும்வரை புலிகள் நினைத்ததுபோலவே எல்லாம் நடந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள்படை என்ற பெயரில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதல்கள் படையினரை பெரும் இக்கட்டுக்குள் மாட்டிவிட்டிருந்தது. ஆவணிச் சமர்வரை அந்தக் கிளைமோர்த் தாக்குதல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துமளவுக்கு இராணுவம் தயாராக இருக்கவில்லை. சமர் ஒன்று தொடங்கினால், வினியோகத் தொடரணிக்கு விழும் இரண்டொரு கிளைமோர்த் தாக்குதல்கள்கூட மொத்தச் சமர்க்களத்தையே மாற்றிவிடுமென்ற நிலையில், சிறிலங்காப் படைத்தரப்பு மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலேயே இருந்தது. இராணுவத்தினர் மேல் பெரியதொரு சமரைத் தொடுப்பதற்கு புலிகளுக்கு ஏதாவது சாட்டு தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். மாவிலாறில் சிறிலங்காப்படையினரின் வலிந்த தாக்குதல்வரை அவர்கள் நினைத்தபடி எல்லாம் நடந்தது. மூதூர்ப்பகுதி மீதான வலிந்த தாக்குதலை நடத்திக்காட்டினார்கள். சிறிலங்கா அரசபடையினரின் நிலைமை தப்பியோடு நிலையில்தான் அப்போதும் இருந்தது.

அதே துணிவில் யாழ்ப்பாணத்தின் மீதும் போர்தொடுத்தனர் புலிகள். ஆனால் நடந்ததோ வேறு. வழமையான புலிகளின் ஆயத்தப்படுத்தல்களின்றி இச்சமர் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. சரியான வேவுத்தரவுகள், நுழைவுப்பாதைகள் இன்றி தாம் ஒரு நாட்டு இராணுவம் என்ற நினைப்புடன் முழுக்க முழுக்க மரபுவழியில் புலிகள் சமரொன்றைத் தொடக்கினார்கள். அணிகள் எவையும் ஊடுருவி தாக்குதல் நடத்தவில்லை. இரவு நேர நகர்வுகளோ எதிரிமீதான திகைப்புத்தாக்குதல்களோ நடக்கவில்லை நேரடியாக கனரக ஆயுதங்கள்மூலம் காவலரண்களைத் தாக்கி முழுமையான மரபுவழிச்சமரொன்றைச் செய்தார்கள். எதிரியின் ஆட்லறி, வினியோகத் தளங்கள் மீதான தாக்குதலைச் சரிவரச் செய்யவில்லை.
அதேவேளை, எதிரிக்கு இது வாழ்வா சாவா நிலைமைதான். ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இராணுவத்துக்கு இதுதான் நிலைமை. தப்பியோட முடியாது. இதுவே வன்னியின் தென்முனையில் எங்காவது நடந்திருந்தால் இராணுவம் தொடக்கத்தில் கட்டாயம் தப்பியோடியிருக்கும். ஓயாத அலைகள் -3 வன்னிக் காட்டில் தொடங்கியபோது இராணுவம் ஓடிய ஓட்டமும், அது யாழ்ப்பாணப்பக்கம் திரும்பியபோது புலிகளுக்குக் கிடைத்த கடுமையான எதிர்ப்பையும் ஞாபகம் கொள்வது சிறந்தது.

ஆவணிச் சமரில் புலிகளின் தாக்குதல்கள் சரியான திட்டமிடலின்றி, சரியான ஒருங்கிணைப்பின்றி நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. விடுதலைப்புலிகளின் முக்கிய படையணிகளும் வீரர்களும் சமரின் தொடக்கத்தில் களத்தில் இறங்கவில்லை. முக்கிய சண்டைத்தளபதிகள் களத்தை வழிநடத்தவில்லை. வேறு ஏதாவது பெரிய திட்டம் வைத்திருந்திருப்பார்கள் (பெரிய தரையிறக்கமொன்று அல்லது மணலாற்றுப்பக்கத்தில் பெரிய பாய்ச்சலொன்று). ஆனால் முதற்கோணலே முற்றும்கோணலாகிப் போய்விட்டது.

சுமார் ஒருவாரம் வரை தொடர்ந்த கடும் சண்டையின்பின்னர் புலியணிகள் பழைய நிலைக்கே பின்வாங்கியதோடு சமர் ஓய்வுக்கு வந்தது. தாக்குதலணிகள் கடுமையாகச் சிதைவடைந்திருந்தன. அணிகளை ஒழுங்குபடுத்தி சீரமைப்பதற்குள் இராணுவம் முகாலையில் முன்னேற்றமுயற்சி மேற்கொண்டு புலிகள் காவலரண் தொகுதியொன்றைக் கைப்பற்றிக் கொண்டது. புலிகளும் மீளமுடியாத நிலையில் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்வது பற்றிக் கதைக்கத் தொடங்கினார்கள. உண்மையில் புலிகளுக்கு தம்மை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. ஆனால் அரசதரப்பு இணங்கிவராமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்தது. பேச்சுக்குப் பலவீனமாகப் போகக்கூடாதென்ற மரபுக்கிணங்க ஹபரண சந்தியில் ஒரு வாகனக்குண்டுத்தாக்குதல் நடத்தி 120 கடற்படையினரைக் கொன்று, காலித் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி ஒரு வெற்றியைப் பெற்று பின்னர் பேச்சுக்குச் சென்றனர் புலிகள்.

ஆவணிச் சமரின் பின் புலிகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அதுவரை செயற்பாடின்றி கலைக்கப்பட்டிருந்த விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியை மீளவும் லெப்.கேணல் அக்பரின் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய போராளிகளையும் இணைத்து படையணியைப் பலமாக்கினார்கள். அமைப்புக்கு ஆட்சேர்ப்பைத் தீவிரமாக்கினார்கள். யுத்தநிறுத்த காலத்தில் புலிகள் அமைப்பின் ஆட்சேர்ப்பு மிகக்குறைவாக இருந்த அதேநேரத்தில் நிறையப்பேர் அமைப்பிலிருந்து விலகிச் சென்றிருந்தார்களென்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆட்தொகை ரீதியில் புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் பலவீனப்பட்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

இந்நிலையில் ஒக்ரோபர் 11 ஆம் நாள் சிறிலங்கா அரசபடைகள் முகமாலை முன்னரங்கின் வழியாக பெரியதொரு படைநடவடிக்கையைச் செய்தது. ஒருநாள் மட்டுமே நடந்த இச்சமரில் இராணுவம் பலத்த இழப்புக்களைச் சந்தித்தது. புலிகளுக்கு அது வாழ்வா சாவா சமர். நன்கு திட்டமிட்ட ரீதியில் அச்சமரைப் புலிகள் வெற்றி கொண்டனர். சில கவசவாகனங்களைத் தாக்கியழித்தனர். முறியடிப்புச் சமருக்கென பெயர்போன புலிகளின் தளபதி கேணல் தீபனின் தலைமையில் இவ்வெற்றி நிகழ்த்தப்பட்டது. அதற்கு மூன்றுநாட்களுக்கு முன்புதான் விக்ரர் கவச எதிர்ப்பணியின் தளபதி லெப்.கேணல் அக்பர் களத்தில் வீரச்சாவடைந்திருந்தார்.
அந்த முறியடிப்போடு புலிகள் தம்மை வடபோர் முனையில் நிலைநிறுத்தியதோடு முன்னர் இழந்த பகுதிகளையும் மீட்டுக்கொண்டனர்.
அன்றிலிருந்து ஒருவருட காலமாக வன்னியின் வடபோர்முனையில் இராணுவம் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச்சமரின் பின்னர்தான் புலிகள் தமது ஆட்பலப் பெருக்கத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பு முறையைக் கொண்டுவந்தார்கள். இதுவரை ஆட்பல ரீதியில் பங்களிப்புச் செய்யாத குடும்பங்களில் வயதுவந்த ஒருவர் கட்டாயம் இயக்கத்தில் இணையவேண்டுமென்ற நடைமுறையை வன்னியில் நடைமுறைப்படுத்தினார்கள். மிகுந்த சர்ச்சைக்குள்ளான இந்த முறைமூலம் தமது படைப்பலத்தை பெருமளவுக்குப் பெருக்கிக் கொண்டுள்ளார்கள் புலிகள்.

அதன்பின்னர் கிழக்கின் துயரம் தொடங்கியது. படிப்படியாக புலிகளின் முக்கிய இடங்களைப் பிடித்தது சிறிலங்கா இராணுவம். வாகரை விடுபட்டதோடு புலிகளுக்கிருந்த நம்பகமான வினியோகத் தொடர்பு அற்றுப்போனது. வாகரை கைவிடப்பட்டபின்னர் எந்தவொரு பெரிய சமரையும் புலிகளால் எதிர்கொள்ள முடியாது என்பது வெளிப்படை. அனாலும் கிழக்கை முழுதாகக் கைப்பற்ற எதிர்பார்த்ததைவிடவும் அதிககாலத்ததை இராணுவம் எடுத்துக்கொண்டது.
இது எதிர்பார்த்ததுதான். ஆனால் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் மாட்டுப்படுமென்பது எதிர்பார்க்காதது. சரியான முறையில் அவற்றைப் பதுக்காமல் விட்டமையால் நிறைய வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. கிழக்கில் தொடரப்போகும் கரந்தடிப் போர்முறைக்கு வன்னியிலிருந்து வழங்கல்கள் போய்ச்சேருவதிலுள்ள சிரமம் தற்போது அளப்பரியது. இந்நிலையில் வெடிபொருட்களைச் சரியாகப் பாதுகாத்திருக்க வேண்டியது முக்கியமானது. இறுதியாக அம்பாந்தோட்டையில் நடைபெற்ற வாகனத்தொடரணி மீதான தாக்குதல்கூட கிளைமோர் இன்றி வெறும் துப்பாக்கி ரவைகளால் நடத்தப்பட்டுள்ளதென்பதைக் குறிப்பிட வேண்டும். ஒரு கிளைமோராவது வைத்துத் தாக்குதல் நடத்தியிருந்தால் இன்னும் பெரியளவில் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

இனி தற்போதைய சூழ்நிலைக்கு வருவோம்.

புலிகள் தம்மீது பாயமுன்பு அவர்கள் மீது தாம் பாயவேண்டுமென சிறிலங்கா அரசபடைகள் திட்டமிட்டிருந்தன. பரீட்சார்த்த முயற்சியாக வவுனியா - மன்னார் முன்னரங்குகளில் மட்டுப்படுத்தப்பட்டளவில் சில நடவடிக்கைகளைச் செய்தன. அவையனைத்தையும் புலிகள் மிகக்கடுமையாக எதிர்த்து முறியடித்தனர். தற்போதைய நிலையில் சிறிய இராணுவத் தோல்வியும் தென்னிலங்கை அரசியிலில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பதால், வெற்றி வராவிட்டாலும் பரவாயில்லை; தோல்வி வரக்கூடாது என்ற நிலையை சிங்கள ஆட்சியாளர்கள் எடுத்திருந்தனர். அதனால் வன்னிமீது பெரும் இராணுவநடவடிக்கையை இதுவரைத் தவிர்த்தே வந்துள்ளனர். ஆனால் புலிகளுக்கு ஓய்வுகொடுத்தால் அவர்கள் தமது அடுத்த பாய்ச்சலுக்கு அதைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவார்கள் என்ற எண்ணம் சிங்களத் தலைமைக்கு உண்டு. அது முற்றிலும் உண்மையும்கூட. அதனால் புலிகளுக்கு ஓய்வு கொடுக்கவிடாமல் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை இடைவிடாது செய்துகொண்டுள்ளனர். புலிகளைத் தொடர்ச்சியாக முன்னரங்க நிலைகளில் மினக்கெடுத்துவதில் இராணுவம் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு இதில் பாதகங்கள் அதிகமுள்ளபோதும் சாதகமும் உள்ளது. கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் ஐயாயிரம் வரையான புதிய உறுப்பினர்களைப் புலிகள் திரட்டியுள்ளார்கள். அவர்கள் ஓரளவுக்கு யுத்தசூழ்நிலைகளுக்குப் பழக்கப்பட்டால்தான் அவர்களை நம்பி பெரியதொரு யுத்தத்தை நடத்த முடியும். புலிகள் இயக்கம் ஒருபோதும் இப்பெருந்தொகையில் புதிய உறுப்பினர்களைத் திரட்டியதில்லை. யாழ்ப்பாண இடப்பெயர்வை அண்டிய நாட்களில் ஆயிரத்து ஐநூறு வரையானவர்கள் இணைந்தமைதான் அதிகபட்சமாக இருந்திருக்க முடியும்.
இப்போது அணித்தலைவர்கள் என்ற நிலையில்பார்த்தால் புலிகள் இயக்கத்தில் குறைபாடுண்டு. திடீரென ஐயாயிரம் பேருக்கான அணித்தலைவர்களைத் தயார்ப்படுத்தும் நிலையில் இயக்கம் இருக்க வாய்ப்பில்லை. யுத்தநிறுத்தகால நீண்ட இடைவெளியில் அணித்தலைவர்கள் பலர் விலத்தியமையும், ஏராளமானோர் திருமணம் புரிந்திருப்பதும் அணித்தலைவர்கள் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சியே. எனவே புதிய உறுப்பினர்கள் சண்டைச் சூழ்நிலைக்குப் பழக்கப்படவும் அவர்களுள் கீழ்மட்ட அணித்தலைவர்களையாவது அடையாளம் கண்டு உருவாக்கவும் சிறிது காலம் தேவை. அதேவேளை அது பெருஞ்சமர்களற்ற ஆனால் யுத்தசூழ்நிலையுடன் கூடிய காலமாகவும் தேவை. அவ்வகையில் தற்போது முன்னணிக் காப்பரண்களில் நடைபெறும் சிறுசிறு மோதல்கள் ஒருவகையில் புலிகளுக்குச் சாதகமே. இப்புதியவர்களில் இரண்டாயிரம் பேராவது குறைந்தது நாலைந்து மாதங்களாவது முன்னணிக் களத்தில் நின்ற அனுபவம் பெற்றிருப்பார்கள். ஆனால் இது போதாது என்றே தோன்றுகிறது. புதிதாக இணைந்தவர்களின் போரறிவும் அனுபவமும் திருப்தி தரும்வகையிலுள்ளதென்று புலிகள் கருதும்பட்சத்தில் நிலமீட்புச்சமரைத் தொடங்க ஏதுவான சூழ்நிலையொன்று உள்ளது. (ஆனால் போதுமானதென்று எனக்குத் தோன்றவில்லை.)

ஆனால் மறுவளத்தில் அணிகளை பின்தளத்தில் ஒருங்கிணைத்து மாதிரிப் பயிற்சிகள அளித்து பெரும் சமருக்குத் தயார்ப்படுத்த முடியாத நிலையை தற்போதைய நடவடிக்கைகள் புலிகளுக்கு ஏற்படுத்தியுள்ளமையானது ஒரு பிரதிகூலமே.

ஆனாலும் ஒன்றை நோக்க வேண்டும். ஓயாத அலைகள் -3 தாக்குதல் புலிகளால் தொடங்கப்பட்டபோது அனைத்து அணிகளும் எதிரியை எதிர்பார்த்துக் காப்பரணில் நின்றவைதாம். எந்தவிதமான மாதிரிப்
பயிற்சிகளும் பின்னணியில் நடத்தப்படவில்லை. சரியான திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்பணிகள் சரியான இடங்களுக்கு ஊடுருவியபின் காவலரணில் நின்ற படையணிகளைக் கொண்டே எதிரிமீதான தாக்குதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. அவ்வகையில், ஓயாத அலைகள் -3 தாக்குதலைத் தொடங்கிய லெப்.கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் ஒரு தொகுதியைத் தவிர வேறு தாக்குதலணிகளுக்கு அச்சமரைப் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை.

இன்றைய சூழ்நிலையும் அப்படித்தான். யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதலைத் தொடுப்பதாக இருந்தால்தான் பெரியளவில் மாதிரிப்பயிற்சிகள் தேவைப்படும். வன்னியின் தென்முனையில் எங்காவது தாக்குதல் தொடங்குவதாக இருந்தால் அணிகளைக் கொண்டு மாதிரிப்பயிற்சிகள் செய்யவேண்டிய தேவையில்லை. சரியான வேவுத்தகவல்கள் திரட்டப்பட்டு திட்டம் தீட்டப்பட்டு கரும்புலிகள் உட்பட சிறப்பு அணிகளை ஊடுருவவிட்டு, பின் களமுனையில் நிற்கும் தாக்குதலணிகளைக் கொண்டே சமரைச் செய்யலாம்.

தற்போது வன்னிக்களமுனையில் போர் உதவிப்படை வீரர் என்ற நிலையில் சில வீரச்சாவுகள் நிகழ்வதை வைத்துப் பார்க்கும்போது புலிகளின் படையணிகள் சில பின்தளத்துக்கு நகர்த்தப்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது. அதேவேளை இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் நடக்கும் - இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியல்லாத தாக்குதற் சம்பவங்கள் வேறொன்றைச் சொல்கின்றன. இச்சம்பவங்களில் புலிகளின் இழப்புத் தொகை தொடர்பாக சிறிலங்கா அரசு வெளியிடும் எண்ணிக்கைகள் ஏமாற்றுவேலை என்பது உண்மை. அதேவேளை புலிகளின் வேவுநடவடிக்கைகள் இப்பகுதிகளில் நடப்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

மேலும் அனுராதபுர வான்படைத்தளம் மீதான தாக்குதலின் மூலம் சிங்களத்தலைமை திகைத்திருக்கிறது. வடபோர்முனையிலுள்ள இராணுவத்தினரின் மனோவலிமை சிறிதாவது ஆட்டம் கண்டிருக்குமென்பதும் உண்மை. மறுவளத்தில் புலிகளுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் இத்தாக்குதல் பெரும் உளப்பலத்தை அளித்துள்ளதென்பதும் உண்மை. யாழ்ப்பாண முன்னரங்கைப் போலவே வன்னியின் தென்முனையும் மிக இறுக்கமான முறையில் இராணுவத்தினரால் பாதுகாக்கப்படுகிறதென்ற மாயை கலைந்துள்ளது. அனுராதபுரத்தாக்குதலுக்கான வேவு நடவடிக்கைகளைச் செய்ததோடு அதற்கான அணிகளையும் வெடிபொருட்களையும் இந்தக் காப்பரண் வரிசைக்கூடாகவே புலிகள் நகர்த்தியுள்ளனர் என்ற சேதியும் இதனுள் உள்ளது. அவ்வகையில் நீண்டகால வேவுப்பணிகள் இக்காவலரண் வரிசைகள் ஊடாக நடந்துள்ளன.

ஆகவே இந்த மாரி காலமும், ஓரளவுக்குப் புதியபோராளிகள் அடிப்படையான போரறிவும் அனுபவும் பெற்றுள்ளதும் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கான சாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. அத்தோடு, மாரிகாலத்தை இராணுவரீதியில் சாதகமாக்க வேண்டுமென்ற குறிக்கேள் முக்கியமானதாக இருந்தால் புலிகளால் எந்த நேரமும் தாக்குதல் தொடங்கப்படலாம் என்ற நிலையுள்ளது. ஆனாலும் வன்னியின் கடைசிக் கையிருப்பிலும் புலிகள் கைவைத்துவிட்டநிலையில் - இனிமேல் புதிதாக மக்கள் வாழிடங்களைக் கைப்பற்றினாலொழிய ஆட்பலத்தைத் திரட்ட முடியாது என்றநிலையில் - கண்மூடித்தனமாக புலிகள் செயலில் இறங்கமாட்டார்கள் என்பதை நம்பலாம். குறைந்தளவு இழப்போடு வெற்றி உறுதி என்று தெரியும்பட்சத்தில்தான் புலிகள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.

களநிலையில் புலிகளின் வலிந்த தாக்குதலைப் பிற்போடும் ஓரம்சம் புலிகளின் ஆயுத வழங்கல்களே. அண்மைக்காலத்தில் சர்வதேசக்கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் சில அழிக்கப்பட்டுள்ளமை உண்மையே. அனால் சிறிலங்கா அரசு சொல்வதைப்போல புலிகளின் ஒட்டுமொத்த ஆயுதக்கப்பல்களையும் அழித்துவிட்டோமென்று சொல்வது சிங்களம் தனக்குத்தானே முதுகுசொறியும் வேலைதான். இன்னும்சில வாரங்களில் இன்னொரு கப்பலையும் அழித்துவிட்டோமென்று அறிக்கைவிடத்தான் போகிறார்கள்.
இந்த ஆழ்கடல் நடவடிக்கைகள் புலிகளின் ஆயுத வழங்கல்களுக்குப் பின்னடைவே. ஆனால் அது எவ்வளவுதூரம் அவர்களைப் பாத்தித்தது என்பதை வரும் காலம் சொல்லும். வேறு வழங்கல்கள் கிடைக்காதவிடத்து புலிகளால் தற்போது பெரியதொரு நிலமீட்புச் சமரைச் செய்ய முடியாது. அவர்களுக்கான வழங்கல் காலந்தாழ்த்தியாவது கிடைக்குமென்பது உறுதியே. அதேவேளை கடல்வழி ஆயுத வினியோகம சரிவராது என்ற பட்சத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆயுதக்களங்சியங்களைக் கைப்பற்றியே ஆகவேண்டுமென்ற நிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை.
ஆனால் களநிலைவரத்தை வைத்துப்பார்க்கும்போது புலிகள் பெரியளவில் வெடிப்பொருள் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளதாகத் தெரியவில்லை.

மறுவளத்தில் அரசியற்களத்தில் நிலைமை வேறுமாதிரி இருப்பதாகப்படுகிறது. நிலமீட்புத் தாக்குதலை நடத்துவதைவிட பொறுமையாக இருப்பது சிறந்தது எனக் கருதுமளவுக்குச் சில விடயங்கள் உள்ளன.

அவைபற்றிப் பிறகு பார்ப்போம்.

Labels: , ,

உங்கள் கருத்தின் படி புலி பாய்வதற்கு ஏதுவாக இருக்கும் சாதகாமான பாதகாமான நிலமைகள் சமவளவிலேயே இருப்பதாக தெரிகின்றது! இந்த நிலைமையில் சாதகாமான காரணிகள் கூடும் பட்சத்தில் புலிப்பாய்ச்சல் நடைபெறுவது உறுதியாயின் அதனால் ஒரு பாரிய திருப்புமுனை இலங்கை யுத்த வரலாற்றில் ஏற்படும் என நீங்கள் கருதுகிறீர்களா? (இலங்கை இராணுவ படை பலத்தை கருத்திற்கொண்டு பார்க்கும் போது)

Post a Comment