« Home | கொழும்புத் தாக்குதலும் சம்பந்தப்பட்டவையும். » | மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம் » | இலங்கை - இன்றைய நிலை-1 » | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் » | இந்தியா - புலிகள் » | நன்றி » | நடப்புகள் பற்றி »

சிங்கள அரசின் படுதோல்வியான தாக்குதல்

இரு தினங்களின் முன் மட்டக்களப்பில் பெரிய சண்டையொன்று நடந்து முடிந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாகனேரி-குளத்துமடு என்ற பகுதியில் நடந்ததே இச்சண்டை.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் சிறிலங்காப் படையினருக்கம் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற பெரிய நேரடிச் சண்டையாக இதைச் சொல்லலாம். நடந்தது என்ன?

புலிகளின் தரப்புக் கூற்றுப்படி,
பெருமளவான படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி வாகனேரி-குளத்துமடுப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் நிலையொன்றை (அனேகமாக சிறிய முகாமாகவோ வீடாகவோ இருக்கலாம்) தாக்கியுள்ளனர். இதில் அங்கிருந்த நான்கு விடுதலைப்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு படையினர் அங்கேயே தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் பலர் தாமாகவே அவ்விடத்தைவிட்டு இடம்பெயர்ந்தனர். பின் புலிகள் இடம்பெயரச் சொல்லி அறிவித்தபின் மிகுதியானவர்களும் இடம்பெயர்ந்தனர்.

இராணுவத்தினர் ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தியதாகவும் தொடர்ந்தும் தமது பகுதிக்குள் இராணுவம் நிலையெடுத்திருப்பதாகவும் அவர்களை உடனடியாக திரும்பிச் செல்லப் பணிக்கும்படியும் விடுதலைப்புலிகள் கண்காணிப்புக் குழு ஊடாக அறிவித்திருந்தனர். இரண்டு மணித்தியாலத்தின்பின், கண்காணிப்புக்குழு பதில் சொல்லியுள்ளது. அதில் இராணுவத்தரப்பு அப்படியான ஊடுருவலை மறுப்பதாகவும், தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்தான் தேடுதல் ஒன்று நடைபெறுவதாகவும் தமக்குச் சொல்லியிருப்பதாகவும் கண்காணிப்புக்குழு பதிலளித்தது.

இதைத்தொடர்ந்து முன்னேறி வந்து நின்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாகக் கூறுகிறது புலிகள் தரப்பு.

பிரச்சினை நடந்துகொண்டிருந்தபோது, அரசகட்டுப்பாட்டுப் பகுதியில்தான் தேடுதல் நடத்தச் சென்ற இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக இராணுவத்தரப்புச் சொல்லியது. அதைவிட புலிகளின் எறிகணைத் தாக்குதலில்தான் படையினர் பாதிக்கப்பட்டதாகவும் இராணுவத் தரப்பை மேற்கோளிட்டு சில செய்திகளும் வந்தன.

நடந்த மோதல் கடுமையானதாகவே தெரிகிறது. புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 12 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஒரு இராணுவ கோப்ரல் உயிருடன் புலிகளால் பிடிக்கப்பட்டார். புலிகள் 12 இராணுவத்தினரது உடல்களைக் கைப்பற்றினார்கள். இராணுவத்தினரின் இழப்பு விவரம் புலிகளால் அறிவிக்கப்பட்ட பின் இராணுவப் பேச்சாளர் அதை மறுத்து பன்னாட்டுச் செய்தி நிறுவனத்துக்குச் சொல்லியுள்ளார். மேலும் சம்பவ இடம் படையினரது கட்டுப்பாட்டுப் பகுதியே என்று திரும்பவும் சொல்லியுள்ளார்.

ஆனால் தம்மால் கைப்பற்றப்பட்ட பன்னிரண்டு சடலங்களையும் புலிகள் கையளித்த போது அரசாங்கம் பெற்றுக் கொண்டது. (முன்பு தனது படையினரின் சடலங்களைப் பெற்றுக் கொள்ளாமல் கைகழுவி விட்ட அரசு இப்போது சடலங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்குப் பக்குவப்பட்டுள்ளது போல் தெரிகிறது. எனினும் சடல எண்ணிக்கை அதிகரிக்கும்போது எப்படி நடந்துகொள்ளுமென்று தெரியவில்லை)
இதன்மூலம் தாக்குதல் நடத்தியது படைத்தரப்புத்தான் என்பதையும் இழப்பு விவரங்களையும் அரசு ஒத்துக் கொண்டது.

அடுத்த விடயம், தாக்குதல் நடந்த இடம் தொடர்பானது. இரு தரப்பும் அது தமக்குரிய இடமென்று சொல்லியுள்ளன. ஆனால் புலிகள் சடலங்களைக் கைப்பற்றியதும், ஒருவரை உயிருடன் பிடித்ததும், சண்டை நடந்த இடத்தைக் கண்காணிப்புக் குழுவுக்குக் காட்டியதும் ஒருதரப்புச் செய்தியை உண்மையாக்குகின்றன. அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என்பதே அது. அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்ததும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான இன்னொரு கிராமத்துக்கு, சண்டை நடந்த இடத்தில் புலிகள் கூடிநின்று புகைப்படங்கள் பிடித்ததும் கண்காணிப்புக்குழுவை அங்கு அழைத்துவந்து காட்டியதும் அது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிதான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கண்காணிப்புக்குழுவுக்கும் உண்மை தெரிந்துள்ளது.

அதைவிட கைதுசெய்யப்பட்ட இராணுவக் கோப்ரல் மேலும் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். ஒரு கப்டனின் தலைமையில் தாக்குதலுக்காக ஊடுருவியதாக அவர் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுவித் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன. எல்லாச் சந்தர்ப்பத்திலும் அவை கருணா குழுவின் வேலை என்றே அரசு சொல்லி வந்தது. கருணா குழுவென்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்களும் உரிமைகோரி அறிக்கை விட்டுக் கொண்டிருப்பர். (இது எல்லாளன்படை, சங்கிலியன் படை போன்றவையென்று எல்லோருக்கும் தெரியும்)
ஆனால் முதன்முதலில் அரசு புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் மேற்கொண்டதை ஒத்துக்கொண்ட சம்பவம் நடந்தது வன்னியில்.
ஊடுருவிய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒருவர் புலிகளின் துணைப்படை மூலமும் இன்னொருவர் ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் மூலமும் கொல்ல்பபட்டனர். அவர்கள் இருவரினதும் சடலங்களும் கைப்பற்றப்பட்டன. (அதன்பிறகு வன்னியில் படையினரின் தாக்குதல் நிறுத்தப்பட்டது. மன்னாரில் மட்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது)

அந்தச் சடலங்களை அரசாங்கம் பொறுப்பெடுத்தது. அதன்மூலம் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது அரசபடைதான் என்பதை அரசே ஒத்துக் கொண்டது. ஆனால் புலிகள் அதை ஏன் பெரிய அளவில் பிரச்சினையாக்கவில்லை என்பது கேள்விக்குறிதான்.

இப்போது மட்டக்களப்பில் நடந்தது இந்த விசயத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. புலிகளின் தாக்குதலில் சடலங்களேதும் கைப்பற்றப்படாமல் அரசபடை வெற்றிகரமாக தளம் திருப்பியிருந்தால் வழமைபோல கருணா குழு உரிமைகோரி அறிக்கை விட்டிருக்கும்; அரச தரப்பும் கருணா குழுதான் செய்தது, தமக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று மறுப்பறிக்கை விட்டிருக்கும்.
ஆனால் இந்தமுறை முகத்திற் கரியைப் பூசிக்கொண்டது அரசு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவ்வளவு காலமும் நடந்த ஊடுருவல் தாக்குதல்கிளில் இருந்து இது வேறுபட்டுள்ளது. வழமையாக மிகச்சிறிய அணியாக வந்து தாக்குதல் நடத்தப்படும். தாக்கதல் நடத்தியதும் அவ்வணி வெற்றிகரமாக தமது தளத்துக்குத் திரும்பிவிடும்.
ஆனால் இம்முறை வந்ததோ மிகப்பெரிய அணி. தாக்குதல் நடத்திய புலிகளின் கணிப்பில் 75 வரையான படையினரென்றும், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் தகவலின்படி 150 வரையான படையினரென்றும் கணக்குக் காட்டப்படுகிறது.

எது எப்படியாயினும் குறைந்தது 50பேர் கொண்ட பெரியதொரு அணியாவது வந்திருக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட சடலங்கள் மட்டுமே 12. ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார். அதைவிட நிறையப்பேர் காயத்துடன் தளம் திரும்பியுள்ளனர். அவர்களை அப்பகுதியிலிருந்து அகற்ற புலிகளுக்கு இரு மணிநேரம் எடுத்துள்ளது. இதைவிட இன்னொரு விசயமும் கவனிக்கப்பட வேண்டும்.
வந்த படையினர் தாக்குதல் நடத்திவிட்டு தளம் திரும்பவில்லை. மாறாக அப்பகுதியிலேயே நிலையெடுத்துத் தங்கியுள்ளனர்.
புலிகளின் எதிர்த்தாக்குதலையும் எதிர்பார்த்தே நிலையெடுத்துள்ளனர். அதற்கேற்றாற்போல்தான் பெருமளவு இராணுவத்தினர் முன்னேஉறி வந்துள்ளனர்.

இங்கே முக்கியமான கேள்வி எழுகிறது. படையினரின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம்? அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே நோக்கமா? அப்படியானால் முழு அளவிலான போரைத் தொடங்கிவிட்டார்களா?
அல்லது புலிகளுக்கு மேலும் இழப்பை ஏற்படுத்த வேண்டுமென்று காத்திருந்தார்களா? பெரியதொரு இலக்கோடு வந்து வெறும் நான்கு போராளிகளை மட்டும் கொன்றது ஏமாற்றமாயிருந்ததால் மேலும் ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் ஒன்று தெளிவானது. புலிகளின் முறியடிப்பு மிகப்பலாமான எதிரியுடன் நடத்தப்பட்டிருக்கிறது. நிலையெடுத்திருந்த எதிரியுடன் கடுமையாகவே சண்டை பிடித்துள்ளனர்ட. அவ்விராணுவத்தினருக்கு ஆதரவாக படைமுகாம்களில் இருந்து எறிகணைவீச்சு மூலம் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் புலிகள் வென்றுவிட்டார்கள். அதுவும் மிகக்குறைந்த இழப்புடன் படையினரைத் துரத்தியுள்ளார்கள்.
முறியடிப்பு மோதலில் புலிகள் தரப்பில் எவ்வித உயிர்ச் சேதமுமில்லை. மூன்றுபேர் மட்டும் காயமடைந்ததாகப் புலிகள் அறிவித்துள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கண்காணிப்புக்குழுவினரை வெளியேறச் சொல்லி புலிகள் காலக்கெடுவும் விதித்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உலகமும் கண்காணிப்புக்குழுவும் உள்ள நிலையில், இதுதொடர்பில் புலிகள் மீது விசனப்பட்டு காட்டமான ஒரு செவ்வியைக் கண்காணிப்புக்குழுத் தலைவர் (இவரும் வெளியேற வேண்டிய பட்டியலில் உள்ளவர்) கொழும்பில் அளித்த நிலையில், படையினரின் இப்பெரிய அத்துமீறலும் புலிகளின் பலமான பதிலடியும் நிகழ்ந்துள்ளது.

இது இலங்கை நிலவரத்தில் பெரிய திருப்புமுனையாக அமையுமெனலாம். ஊடுருவல் தாக்குதல்களை தமது படையினர் தான் செய்கின்றனர் என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளும் நிலைக்குச் சிங்கள அரசு தள்ளப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. யுத்த மேகங்களும் இலங்கையில் தெளிவாகவே தெரிகின்றன.

நல்ல கட்டுரை.

கண்காணிப்புக்குழு இன்னும் அறிக்கை விடவில்லை. இந்த முறை என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

R.Mohan.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன்.
உங்கள் பின்னூட்டத்தில் சிலவரிகளை நீக்கி இட்டுள்ளேன்.

Post a Comment