August 22, 2006

மாவிலாறு: ஈழப்போராட்டத்தின் தடைநீக்கி

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
நாலரைவருட தளம்பல் காட்சிகளிலிருந்து இப்போது புகார் விலகி உண்மை தெரியத் தொடங்கியுள்ளது.
இதுவரை அந்தப்பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் கேட்டிராத 'மாவிலாறு' என்ற இடத்திலிருந்து ஈழப்பிரச்சினையின் முக்கிய பொறி பற்றத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி அதிகம் பேசத் தேவையில்லை.


தடுக்கப்பட்ட மாவிலாறைத் திறப்பது தொடர்பாக புலிகளுடனும் அப்பகுதி மக்களுடனும் கண்காணிப்புக்குழு பேசிக்கொண்டிருக்கும்போதே, அவ்விடத்தில் அரசவான்படை தாக்குதலை நடத்தியதோடு அந்தப்பிரச்சினைக்கு முழுமையான இராணுவப்பரிமாணம் அரசபடையால் வழக்கப்பட்டது. பின் அணைக்கட்டைக் கைப்பற்றி, தாமே நீரைத் திறப்பதாக அரசு சூளுரைத்து நடவடிக்கையில் இறங்கியது. புலிகள் அணையை பூட்டியே வைத்துவிட்டனர்.

இராணுவ முன்னேற்றத்தை கடுமையாக எதிர்கொண்டு தோற்கடித்தனர் புலிகள். இந்நிலையில், "புலிகள் அணையைத் திறந்தால் நடவடிக்கை நிறுத்தப்படும்" என்று அமைச்சர் அறிவித்தார். இடையறாத தாக்குதலால் பொதுமக்களும் போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில் புலிகள் குறிப்பிட்ட முகாம்கள் மீது தாக்குதலைத் தொடுத்து அவற்றைக் கைப்பற்ற முயன்றனர். அதன் தொடக்கமாக திருகோணமலைத் துறைமுகம் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

புலிகள் துறைமுகம் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தும் வலுவுடன் இருப்பதாக ஓரிரு தடவைகள் பேசப்பட்டபோதும் பெரும்பான்மையானோர் அதை மறுத்தே வந்துள்ளார்கள். எறிகணை செலுத்திகளை வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று சொல்லப்பட்ட, துறைமுகத்துக்கு மிகக்கிட்டிய புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூர், சிறிய கட்டுப்பட்டுப் பிரதேசமாகவும் முழுமையான பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பதே இதற்குக் காரணம். இந்நிலையில் புலிகள் ஆட்லறிகளை அப்பகுதிக்கு நகர்த்துவதற்குத் துணிய மாட்டார்கள் என்பதே எல்லோரினதும் கணிப்பு. ஆனால் அதைமீறி காரியம் நடந்தே விட்டது. துறைமுகம் மீதான முதலாவது தாக்குதலில் 36 எறிகணைகள் வீசப்பட்டன. அனால் மிகத்துல்லியமான எறிகணை வீச்சு.
36 எறிகணைகளில் 6 பேர் கொல்லப்பட 30 பேர் காயமடைவதென்பது (இது அரசதரப்பின் மிகக்குறைந்த சேதச்செய்தி) மிக உச்சப்பெறுபேறு.

அதன்பின் சில நாட்களுக்கு எந்த எறிகணைத் தாக்குதலும் துறைமுகம் மீது நடத்தப்படவில்லையென்பதால் புலிகள் ஆயுதத்தை பழையபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கலாம் என்ற ஊகம் பொதுவாக நிலவியது. ஆனால் சிலநாட்களின்பின் (யாழ்ப்பாணத்தில் களம் திறந்தபோது) மீண்டும் துறைமுகம் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. இம்முறை பெருமளவில் எறிகணைகள் ஏவப்பட்டன. இலக்கும் விரிவடைந்தது. இத்தாக்குதல் மூலம் எல்லோரையும் ஆடிப்போக வைத்துவிட்டார்கள் புலிகள். முதல் தாக்குதலின்போது 800 பேருடன் வந்த கப்பல் திரும்பிச் சென்றுவிட்டது. துறைமுகத்திலிருந்து அனைத்தையும் இடம்மாற்றவேண்டி வந்துவி்ட்டது. யுத்தக் கலங்களை வர்த்தகக் கலங்கள் பாவிக்கும் சீனன்குடாத் துறைமுகத்துக்கு நகர்த்த வேண்டியதாகிவிட்டது. சீனன்குடா துறைமுகம்கூட சூட்டெல்லைக்குள்தான் இருக்கிறது. ஆனால் வர்த்தகக் கப்பல்களோடு இவை இருப்பதால் ஒரு பாதுகாப்பு.

இப்போதும் எந்த நேரமும் துறைமுகம் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்பதுதான் கள யதார்த்தம்.

மறுமுனையில் மாவிலாற்று நடவடிக்கைக்குப் பதிலடியாக புலிகள் தரைவழியால் முன்னேறி சில பகுதிகளைக் கைப்பற்றினர். மூதூர் இறங்குதுறைக்காக இருதரப்பிலும் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. மூன்றுநாள் நடவடிக்கையின்பின் புலிகள் தமது தளம் திரும்பினர்.
சிறிலங்கா அரசு வழமைபோல தனது பக்க இழப்பைக் குறைத்து புலிகளின் இழப்பை அதிகரித்துச் சொன்னது. இரண்டு டோறாக்களை மூழ்கடித்தது உட்பட பல படையினரைக் கொன்றதூடாக புலிகள் இதில் வெற்றி பெற்றார்கள் என்றே கூற வேண்டும். புலிகள் பின்வாங்கியதூடாக, இது புலிகளின் இயலாமையைக் காட்டுகிறது என்று சிலர் சொல்லலாம். ஆனால் புலிகள் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் நிலைக்கு அரசியல் ரீதியில் இன்னும் தயாரில்லை. அதாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்துவிட்டதாகக் காட்ட விரும்பவில்லை. புலிகள் மூதூர் நோக்கி முன்னேறியபோது 'சமாதான நடுவர்கள்' புலிகள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் அரச தலைவர்களோ யுத்த வெற்றி பற்றிய மமதையிலிருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. தாமே புலிகளை விரட்டியதாகச் சொன்னார்கள். அத்தோடு மேலும் தீவிரமாக யுத்த நடவடிக்கையைச் செய்தார்கள். இந்நிலையில் நோர்வேத் தரப்பு புலிகளுடன் பேசி மாவிலாறு அணைக்கட்டைத் திறப்பதற்கு இணக்கப்பாடு கண்டார்கள். அதன்படி உடனடியாகவே யுத்தநிறுத்த கண்காணிப்புக்ழுத் தலைவருடன் புலிகள் அணைக்கட்டைத் திறக்கச் சென்றபோது அரசபடை அவர்கள் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியது. அணைக்கட்டு திறக்கப்படக்கூடாதென்பதே அரசவிருப்பமென்பதுபோல் தெரிந்தது.

பின் புலிகள் அணைக்கட்டைத் திறக்கக்கூடாது, தாமே திறக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார் அமைச்சர். நோர்வேத் தரப்பின் கூற்றுப்படி அரசாங்கம்தான் இவ்வணைக்கட்டுப் பிரச்சினையில் அவர்களை சமரச முயற்சிக்குத் அழைத்ததாகத் தெரிகிறது. ஆனால் இறுதியில் தம்மை அவமதித்தது நோர்வேயைச் சினம் கொள்ள வைத்துள்ளது.
அதைவிட ஐந்து நாட்களின் முன்பு அமைச்சர், ' புலிகள் நீரைத் திறந்துவிட்டால் யுத்தம் நிறுத்தப்படும்' என்று அறிவித்த கதை இறுதயில் அவர்களாலேயே கேலிக்கூத்தாக்கப்பட்டது.

யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் உட்பட அணைதிறக்கச் சென்றவர் மீது தாக்குதல் நடத்தியது, நோர்வேயின் அனுசரணை முயற்சியைக் கேலிக்குள்ளாக்கியது, வெளிப்படையாகவே அணைதிறப்பு முயற்சியில் நோர்வேயை அவமதித்துப் பேசியது என்பதுட்பட பல விசயங்கள் நோர்வேக்குச் சினமூட்டியுள்ளது. இந்நிலையிதான் அரசதரப்பின் மீது பகிரங்கமாகவே நோர்வே குற்றம் சாட்டியது. நடக்கும் சண்டை தண்ணீருக்கானதல்ல என்றும் கூறியுள்ளது.

அரசியில் ரீதியில் புலிகளுக்கு இது வெற்றியே. வழமையாக அரசதரப்பு மட்டில் நோர்வேயும் சரி, கண்காணிப்புக்குழுவும் சரி மென்போக்கையே கடைப்பிடித்து வந்தன. இப்போது அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டுள்ளார்கள்.
அதைவிட அரசு விடாப்பிடியாக யுத்தம்மூலம் அணைக்கட்டைத் திறப்போம் என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அப்பாவி மக்கள் மீது பல்லாயிரக்கணக்கில் எறிகணைகளையும் குண்டுகளையும் வீசிக்கொண்டிருந்த நிலையில், புலிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்து நிலம்வழியாக முன்னேறிக் கொண்டு புலிகளை ஆத்திரமூட்டிக்கொண்டிருந்த நிலையில், புலிகள் மனிதாபிமானமாக நீரைத் திறந்துவிட்டுள்ளனர். இதுவும் அரசியல் ரீதியில் புலிகளுக்குச் சாதகமே.

இந்தச் சமாதானப் பொறிக்குள்ளிருந்து எப்படி வெளியேறுவது என்று தள்ளாடிக்கொண்டிருந்த புலிகளுக்கு உலகமே சாதகமான முறையில் படிப்படியாக வழியொன்றைக் காட்டியுள்ளது. அந்த வழியை சிறிலங்கா அரசு மேலும் இலகுவாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தடைமுதல் மாவிலாறு மீதான யுத்தம்வரை நடந்தவை அவைதாம்.

மாவிலாறு முனையில் புலிகளுக்குச் சாதகமாக இன்னொரு சம்பவம் நடந்தது. மாவிலாறு அணைக்கட்டைப் படையினர் கைப்பற்றிக் கொண்டதுதான் அது. அதாவது யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் போதான நிலையிலிருந்து முன்னேறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை சிறிலங்காப்படையினர் கைப்பற்றி தொடர்ந்து தக்கவைத்துள்ளனர். இங்கே, புலிகள் இயலாமையால் அவ்விடத்தை இழந்தார்களா அல்லது வேண்டுமென்றே தந்திரமாகப் பின்வாங்கினார்களா என்ற கேள்வி வருகிறது. ஆனால் படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றைக் கைப்பற்றினார்கள் என்பதே முக்கிய அவதானம்.
இதுவே இன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட களத்துக்கும், யாழ்ப்பாணத்தில் புலிகளைப் பின்வாங்கச் சொல்லி 'சமாதான நடுவர்களால்' அறிவுறுத்த முடியாமல் இருப்பதற்கும் மூலகாரணம்.

இன்று மாவிலாறிலிருந்து சிங்களப்படையால் பின்வாங்க முடியாது. அந்தளவுக்கு அவர்கள் அதைப் பெரிய அரசியலாக்கிக் குளிர்காய்ந்தார்கள். என்னவிலை கொடுத்தும் மாவிலாறைத் தக்கவைக்கவேண்டுமென்ற நிலைக்குச் சிங்கள ஆழும்வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. இது அவர்களாகவே தேடிக்கொண்டது. இந்த நிலைதான் தமிழர் தரப்புக்குச் சாதகமானது. சமாதானப் பொறியிலிருந்து முழுவதுமாக விடுபட தமிழர்க்கு இருக்கும் துருப்புச்சீட்டுத்தான் இந்த மாவிலாறு. தொடரப்போகும் நிகழ்வுகளுக்கு அச்சாரம் போட்டதும் இந்த மாவிலாறுதான். இன்று யாழ்ப்பாணத்தில் தொடங்கிய களமுனைக்கும் 'மூலம்' இதே மாவிலாறுதான்.

அதனாற்றான் சொல்கிறோம்,
மாவிலாறு: ஈழப்போராட்டத்தின் தடைநீக்கி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதைப் பிறகு பார்ப்போம்.