« Home | இலங்கை - இன்றைய நிலை-1 » | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் » | இந்தியா - புலிகள் » | நன்றி » | நடப்புகள் பற்றி »

மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம்

இது பற்றி எழுதுவதாக கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வன்னிதான் புலிகளின் முக்கியமான தளம். ஈழப்போராட்டத்தின் மையம் என்று சொல்லலாம். பெரியதொரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள் புலிகள். இந்நிலைப்பரப்பு இலங்கைத்தீவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளைக் கொண்டுள்ளது. கிழக்கே நாகர்கோயிலில் இருந்து நாயாறு வரையான நீண்ட கடற்கரையும் மேற்கே அதைவிட சிறிய கடற்கரையும் புலிகளின் கட்டுப்பாட்டுள் உள்ளது. இதில் மேற்குக் கடற்கரைதான் மன்னார்க்கடல் எனப்படுகிறது.

முன்னர் மன்னாரில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டனவாகவே இருந்தன. அவர்களின் முக்கிய கடற்படைத் தளமாக முல்லைத்தீவு மற்றும் கிழக்குக் கடற்கரையோரமே இருந்தது. மன்னார்க் கரை, எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்கள் பெறுவதற்கான ஒரு பகுதியாகவே இருந்தது. அவ்வப்போது அவசரமாக மருந்துப்பொருட்களும் இவ்வழியால் பெறப்படுவதுண்டு. மன்னாருக்கு சண்டைப்படகைக் கொண்டு செல்ல வேண்டுமானால் புலிகள் தரைவழியாகவே முல்லைத்தீவிலிருந்து படகைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. மன்னார்ப் பக்கத்தில புலிகளின் படகுக் கட்டுமானத் தளங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆக, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளத்துடனே மன்னாரில் கடற்புலிகள் இயங்கி வந்தார்கள்.

சிங்களக் கடற்படையின் பலமே மன்னாரில் ஓங்கியிருந்தது என்றால் மிகையில்லை.

ஆனால் சமீபத்தில் புலிகள் மன்னாரிலும் வலுவான நிலையை ஏற்படுத்த முயல்கின்றனர். ஏறத்தாழ வெற்றியும் பெற்றுவருகின்றனர். நீண்டதொரு கடற்சமரை நடத்துமளவுக்கு மன்னார்க்கடலில் புலிகள் வலுவாக வந்துவிட்டனர். அண்மையில் மன்னார் -புத்தளக் க்கடலில் சில சமர்கள் நடந்துள்ளன. அவற்றில் கடற்புலிகளின் கையே ஓங்கியிருக்கிறது.

இது சிறிலங்கா அரசுக்கு பலத்த அதிர்ச்சிதான். ஏனென்றால் கொழும்பு, நீர்கொழும்புக்கான ஆபத்து மிக வலுவாகவே தெரியத் தொடங்கியுள்ளது. மன்னார் -புத்தளக் கடலில் அதிகரிக்கும் கடற்புலிகளின் பலம் கொழும்புக்கு நிச்சயம் பீதியைக் கொடுக்கும். ஏற்கனவே நீர்கொழும்பு, வத்தளை போன்ற இடங்களில் பிடிபட்ட புலிகளின் தொடர்புகள் மூலம் மன்னாரிலிருந்து கடல்வழியான நகர்வை புலிகள் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தென்கடல் பாதுகாப்பு

இந்நிலையில் நீர்கொழும்பு - கொழும்புக் கடற்கரைகளைப் பாதுகாக்க பெரியதொரு கடற்படைத் தொகுதியை அது ஈடுபடுத்த வேண்டி வரும். இப்போது அந்த நிலை வந்துவிட்டது. மன்னாரிலிருந்து கொழும்பு வரையான கடலில் எந்த நேரமும் முழுக்கண்காணிப்பைச் செய்யவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு மட்டுமன்றி பாதுகாப்பு நடவடிக்கையையும் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் கொழும்புத் துறைமுகத்துக்கான பாதுகாப்புக்கு திருகோணமலையிலிருந்து மேலதிகமாக டோறாக்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் இலங்கைக் கடற்படையின் பலம் சிதறுகிறது. தன் கடற்படைப்பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே யுத்தத்தை எதிர்கொள்ளப் போதாத பலத்துடன் தான் கடற்படை இருந்தது. இந்நிலையில் மேலதிகமாக ஒரு பணியை ஏற்றுச் செய்வதற்குப் போதிய பலம் இல்லை. கொழும்பு உட்பட்ட மேற்குக் கரைப் பாதுகாப்புக்கென நிரந்தரமாகவே படைத்தொகுதியொன்றை வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது திருகோணமலையிலிருந்தோ காங்கேசன் துறையிலிருந்தோ உதவிப் படைகளைப் பெறமுடியாது.

வடக்கு - கிழக்கு கடற்பாதுகாப்பு.

அதிகரிக்கும் தென்பகுதிப் பாதுகாப்பானது கிழக்குக் கடற்பகுதியின் பாதுகாப்பு வலுவைக் குறைக்கும். முக்கியமாக திருகோணமலையை மையமாக வைத்த கடற்படைத்தளம் பாதிப்புக்குள்ளாகும். இதன்மூலம் புலிகளின் ஆழ்கடல் வினியோகத்தை எதிர்கொள்வதும் சிரமத்துக்குள்ளாகும். அதேவேளை வன்னியுடன் கிழக்கு மாகாணத்துக்கு நடக்கும் புலிகளின் வினியோகங்களையும் தடுப்பது சிரமம் ஆகிவிடும். திருகோணமலைக்கோ மட்டக்களப்புக்கோ புலிகள் கனரக ஆயுதங்களை நகர்த்தாமல் பார்த்துக்கொள்ளும் வரைதான் கிழக்கில் புலிகளின் பாரிய இராணுவ நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் திருகோணமலைக் கடற்படைத்தளத்தால் அது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் திருகோணமலையில் கடற்படை வலுவிழப்பது மேலும் ஆபத்து.
அதைவிட யாழ்ப்பாணப் படையினருக்கான ஒரேயொரு சாத்தியமான கடல்வழி வினியோகத்துக்கு முழு அளவில் பாதுகாப்புக் கொடுப்பது
சிரமத்துக்குள்ளாகும். முழுப்பாதுகாப்போடு போகும்போதே கடற்புலிகளின் தாக்குதலைச் சமாளிப்பது கடினமாகவே கடந்த காலங்களில் இருந்தது.
அடுத்து, தனிப்பட திருகோணமலைக் கடற்படைத்தளத்தின் பாதுகாப்பும் கேள்விக்குரியதாகிவிடும். திருமலைத் துறைமுகத்தை இலக்கு வைத்துப் புலிகள் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள பெரிய பலம் வேண்டும். புலிகள் துறைமுகத்தைத் தாக்கமாட்டார்கள் என்றில்லை. திருகோணமலை மீது புலிகளுக்கிருக்கும் வேட்கையும், அதைக்கைப்பற்றும் அவர்களின் முனைப்பும் யாவரும் அறிந்த்தே. திருகோணமலையின் அரசியல் முக்கியத்துவம் பற்றியும் அது தமிழரிடம் வரவேண்டிய தேவை பற்றியும் தமிழ்சசி கட்டுரை எழுதியிருக்கிறார்.

________________________________________
இவையனைத்தும் மன்னார்க்கடலில் புலிகளின் கை மேலோங்குவதால் ஏற்படும் விளைவுகள். இன்றைய நிலையில் மன்னார்க்கடலைப் புலிகள் குறிவைத்துள்ளனர் என்பது முற்றிலும் உண்மை.

இந்தச் சிக்கலை எதிர்கொள்ள அரசுக்கு உள்ள ஒரேவழி, கடற்படையின் பலத்தைப் பெருக்குவதுதான். கடற்கலங்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். குறிப்பாக டோறா வகையான கடற்கலங்களின் எண்ணிக்கை பெருக்கப்பட வேண்டும். ஆட்பல எண்ணிக்கையில் சிறிலங்காக் கடற்படை மோசமானதாகத் தெரியவில்லை. (தரைவழியிலேயே அதிகளவு கடற்படையினர் பயன்படுத்தப்பட்டனர் என்பது கடந்தகால வரலாறு. குறிப்பாக கைப்பற்றப்பட்ட இடங்களைப் பாதுகாக்க கடற்படையினர் பயன்படுத்தப்பட்டனர்)

இன்றைய நிலையில் எவ்வளவுதூரம் கடற்படைப்பலத்தை சிறிலங்கா அரசால் பெருக்க முடியும்? ஒரு டோறாப் பீரங்கிப்படகைக் கொள்வனவு செய்ய குறைந்தபட்சம் இருபது கோடி இலங்கை உரூபாய்கள் தேவை. அந்த டோறாவை நவீனப்படுத்த முற்பட்டால் இன்னும் அதிகமாகும். திருகோணமலையில் இலங்கையரசு சொந்தமாக சண்டைப்படகுகள் தயாரிக்கிறது. ஆனால் அங்குத் தயாரிக்கப்படும் டோறா வகைப்படகு இஸ்ரேலின் 'சுப்பர் டோறா' என்ற விசைப்படகுக்கு நிகரானதாகச் சொல்ல முடியாது.
அடிப்படையில் தரைப்படையை விட கடற்படை அதிகளவு செலவுநிறைந்த படை. இது கடற்புலிகளுக்கும் பொருந்தும். ஆனால் புலிகளுக்கு ஒரு சண்டைப்படகுக்கு ஆகும் செலவு ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவே.

நன்றி JustForComment அவர்களே.
ஆம். அவர்கள் படைப்பலத்தைப் பெருக்கவே செய்வார்கள். இப்போது அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

Post a Comment