September 05, 2006

சம்பூரும் தமிழர் போராட்டமும்

இன்று அரசியலிலும் போரியலிலும் சம்பூர் என்ற சொல் உணர்த்துவது அச்சிறிய கிராமத்தையன்று.
மாறாக அதைச்சுற்றியுள்ள ஒரு தொகுதிக்கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை.
முன்பு இதே பகுதிகள் மூதூர் என்ற சொல்லினூடகக் குறிக்கப்பட்டன. வடபகுதியில், மூதூரின் ஒருபகுதி படையினரிடமும் மறுபகுதி புலிகளிடமும் இருப்பதாகவே எண்ணப்பட்டது. புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை அழைத்தது 'மூதூர் கோட்டம்' என்ற பேரால்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின்தான் சம்பூர் என்ற பேர் பிரபலமாகத் தொடங்கியது. தொடக்கத்தில் பலர் மூதூரும் சம்பூரும் வெவ்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்றே நினைத்தனர். அரசியல் ரீதியில் சம்பூர் பிரபலமாகத்தொடங்கியது. அது முற்றி இராணுவ ரீதியிலும் பிரபலமாகத் தொடங்கியது. 'குரங்குப் பாஞ்சான்' என்ற இடத்தின் பிரச்சினை ஓரளவு அமுங்கிப் போனபோது சம்பூரின் பெயரில் சர்ச்சை முளைத்தது. சம்பூரில் புலிகள் விமானத்தளம் அமைக்கிறார்கள் என்றளவில் சர்ச்சை தொடங்கியதுடன் அப்பகுதிக்கான பொருளாதாரத் தடை அரசாங்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின் இவ்வாண்டின் தொடக்கத்தில் இச்சர்ச்சைகள் கூர்மையுற்றன. ஏப்ரல் இறுதியில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலைத் தொடர்ந்து சம்பூர்ப்பகுதி மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆவணி மாதம் திருகோணமலைத் துறைமுகம் மீது புலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்தியதோடு இப்பகுதி முழு முக்கியத்துவம் பெற்றது. அன்றிலிருந்து சம்பூரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்று சிங்களத்தரப்பு கர்சித்து வந்தது.

சம்பூரைக் கைப்பற்ற முழு அளவில் இராணுவத் தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் தொடங்கியது. அது தொடங்கியபோது அத்தாக்குதலின் நோக்கம் பற்றி முரண்பாடான தகவல்கள் அரசிடமிருந்து வெளிவந்தன. ஒருவர், இது சம்பூரைக் கைப்பற்றும் நோக்கத்துடன் நடத்தப்படுவதாகச் சொல்ல, மற்றொருவர் அப்படியி்ல்லை என்று மறுத்தார்.
ஆனால் அப்போதே நோக்கம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது.

ஒரு வாரகால சண்டைக்குப்பின் இப்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. சம்பூர்க்கிராமம் முற்றாகப் பறிபோனதா இல்லையா என்பது தெரியாவிட்டாலும் சம்பூர் என்ற சொல் எதைக் குறித்ததோ அது மட்டில் படையினர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதன் அடிப்படையில் திருமலைத் துறைமுகத்துக்கான ஆபத்து தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. அதுகூட முற்றிலும் என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக புலிகள் சம்பூரில் பயன்படுத்தியது 122 mm,152 mm, 85 mm என்பவற்றில் ஏதாவதொரு ஆட்லறியாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஆனால் திருமலையில் 130 mm ஆட்லறியைப் புலிகள் நிலைப்படுத்தியிருந்தால் திருமலைத் துறைமுகம் இன்னும் எறிகணை வீச்செல்லைக்குள்தான் இருக்கும். ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைந்தளவே உள்ளது.

சம்பூர் என்பது இன்றைய நிலையில் மிக முக்கிய கேந்திர முக்கியத்துவமான இடமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த இழப்பு தமிழர் தரப்புக்கு ஈடு செய்யமுடியாததுதான்.
ஆனால் புலிகள் ஓடி ஒழிந்துவிட்டார்கள், அவர்கள் கதை முடியப்போகிறது, இனி முல்லைத்தீவுதான் அடுத்த இலக்கு, அதையும் இழக்கப்போகிறார்கள் என்று கதை விட்டுக் கொண்டிருப்பது அதீதமாகவே படுகிறது. சொல்லப்போனால் தங்கள் மனவிருப்பத்தை இப்படிச் சொல்வதாக நினைக்கலாம்.
சுனாமி தாக்கியபோது இரண்டாயிரம் புலிகள் அழிந்தார்கள் என்று தாங்களே செய்தியை உருவாக்கிப் பரப்பித் திரிந்ததுபோல்தான் இதுவும் தோன்றுகிறது.

முழு யுத்தக்காலமொன்றில் இப்படிப் பின்வாங்க நேர்ந்தால் சந்தேகமில்லாமல் அது புலியின் இயலாத்தன்மை என்று சொல்லலாம். ஆனால் இது அப்படியன்று. ஒருதரப்பின் கைகளைக் கட்டிவைத்துக் கொண்டு மறுதரப்பை அடிக்க விட்டுவிட்டு 'ஆகா இவன் தோற்றுவிட்டான' என்று சொல்வதற்குச் சமன்.
புலிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று சொன்னால் இங்கு எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது தெரியும்.
அனால் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மூதூர் இராணுவ முகாம்களைத் தாக்கியபோது அடுத்தநாளே 'அவர்கள் தங்கள் யுத்தநிறுத்த ஒப்பந்த நிலைகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்' என்று கட்டளை போட்ட பன்னாட்டு நடுவர்கள், படையினர் மாவிலாறைக் கைப்பற்றியபோதும் இப்போது சம்பூரைக் கைப்பற்றியதாகச் சொன்னபோதும் ஏன் ஏதும் பேசவில்லை.
புலிகள் மட்டும் புரிந்துணர்வு ஒப்பந்த நடைமுறைக்கு உட்பட்டவர்கள், சிங்களப்படைகள் அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துத்தானே அது?

இப்போது சம்பூர் இழப்பை புலிகள் எப்படி அரசியலாக்கிப் போராடப்போகிறார்கள் என்பதே கேள்வி. சம்பூரிலிருந்து படையினர் விலகி பழைய நிலைகளுக்குச் செல்ல வேண்டுமென்று நோர்வேயைக் கொண்டு சொல்லுவிக்க வேண்டும். அனால் சிங்களத்தரப்பு மீள முடியாது. நிச்சயம் எதிர்மறையான பதிலே அரசிடமிருந்து கிடைக்கும். அதைவைத்து நோர்வே அரசதரப்பைக் குற்றம் சொல்லி, நடுவர் பணியிலிருந்து வெளியேற வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும்.
நடக்குமா?

புலிகளின் இராணுவப்பலம் குறைந்துவிட்டதாகக் கருதுபவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். இதைவிட மிகமிகச் சிக்கலான நிலைக்குள்ளிருந்து மீண்ட வரலாறு புலிகளுக்குண்டு. யாழ்ப்பாண இழப்பின் போதாயினும்சரி, ஜெயசிக்குறு உச்சநிலையில் இருந்தபோதான நிலையோடு ஒப்பிட்டாலும் சரி, இப்போதுள்ள நிலைமை இராணுவ ரீதியில் ஒரு பிரச்சினையே இல்லை. பிரச்சினை முழுவதும் அரசியல் ரீதியானதே.

புலிகளை அமுக்க ஏன் எல்லாச் சக்திகளும் ஒன்றாகின்றன, அரச ஒடுக்குமுறையையும் பயங்கரவாதத்தையும் பாராமுகமாக இருக்கின்றன என்பதற்கான பதில் மிகத் தெளிவானது. அது அவர்களே சொல்வது போல் புலிகள் பயங்கரவாதிகள் என்பதன்று. இந்தச் சக்திகளிடமிருந்து ஒருபோதும் நீதியான தீர்ப்பை தமிழர் போராட்டம் பெற முடியாது. உலகப் பயங்கரவாதிகள், புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பவர்களுக்கும் இது தெரியும்.

தற்போதைய நிலையில் படையினரின் மனவுறுதி உயர்ந்துள்ளது. சற்றுமுன் இருந்த நிலையிலிருந்து நிச்சயம் சிங்களப்படையின் உளவுரண் உயர்ந்துள்ளது. இது புலிகள் தொடுக்கப்போகும் பெரிய தாக்குதலின் முற்பகுதியில் விளைவைத் தரும். கடுமையான எதிர்த்தாக்குதல் படையினரிடமிருந்து கிடைக்கும். அந்தநேரத்தில் படையினருக்கு உடையும் உளவுரண்தான் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிக்கு வழிவகுக்கும்.

விரைவில் புலிகள் தரப்பிலிருந்து சரியான பதிலடி கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.