« Home | உலகம் கோமாளிகளின் கையில் » | சம்பூரும் தமிழர் போராட்டமும் » | மாவிலாறு: ஈழப்போராட்டத்தின் தடைநீக்கி » | புலிகளின் புதிய வளர்ச்சி. » | சிங்கள அரசின் படுதோல்வியான தாக்குதல் » | கொழும்புத் தாக்குதலும் சம்பந்தப்பட்டவையும். » | மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம் » | இலங்கை - இன்றைய நிலை-1 » | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் » | இந்தியா - புலிகள் »

எல்லாளன் நடவடிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகளால் 'எல்லாளன் நடவடிக்கை' எனப் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் நடந்து ஒருவாரம் கடந்துவிட்டது. இன்னமும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. இப்போதைக்கு அடங்கப்போவதுமில்லை. மிகமிக முக்கியமானதொரு காலகட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஈழப்போராட்டத்தின் தேக்கநிலையை உடைத்தெறிந்த முக்கியமானதொரு சம்பவம் இதுதான்.

1.
பொருளாதார ரீதியில் பார்த்தால் சிறிலங்கா அரசுக்குப் பெருமிழப்பை ஏற்பத்திய தாக்குதல் வரிசையில் இரண்டாம் இடத்தில் இப்படை நடவடிக்கை வரும். ஜூலை 24, 2001 இல் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலிலேயே அதிகபட்ச பொருளாதார இழப்பை சிறிலங்கா அரசு சந்தித்திருந்தது.
மாறாக விமானப்படையினருக்கு ஏற்பட்ட இழப்பு எனப்பார்த்தால், கட்டுநாயக்கா மீதான தாக்குதலும் எல்லாளன் படைநடவடிக்கையும் கிட்டத்தட்ட ஒரேயளவான பரிணாமத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் காலம், இடம் என்பவற்றைப் பொறுத்து இவையிரண்டும் வேறுபடுகின்றன.

2.
புலிகள் தரப்பில் அதிகபட்சமான கரும்புலிகள் ஒரேதாக்குதலில் பலியான சம்பவம் எல்லாளன் படைநடவடிக்கைதான். இதுவரை 13 கரும்புலிகளே அதிகபட்சமாக ஒருநடவடிக்கையில் வீரச்சாவடைந்துள்ளனர்.
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் 'தவளை நடவடிக்கைக்கு ஆதரவாக பலாலி விமானப்படைத்தளம் மீது '11.11.1993 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

01.02.1998 அன்று கிளிநொச்சிப் படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆனையிறவுத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் கிளிநொச்சி மீதான வாகனக் கரும்புலித் தாக்குதலிலும் லெப்.கேணல் சுபேசன் உட்பட மொத்தமாக 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

அதற்கு அடுத்தபடியாக அதிக கரும்புலிகள் வீரச்சாவடைந்த சம்பவம் 29.10.1995 அன்று சூரியக்கதிர் நடவடிக்கைப் படையினருக்கு எதிராக அளவெட்டிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

இம்மூன்று தாக்குதல்களுமே தாக்குதல் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முற்றுமுழுதாகத் தோல்வியில் முடிவடைந்தவை.
இவற்றையெல்லாம் கடந்து அதிகபட்சமாக 21 கரும்புலிகள் ஒரே தாக்குதலில் வீரச்சாவடைந்த சம்பவம் 'எல்லாளன் நடவடிக்கை' ஆகும். ஆனால் இங்கு நோக்கம் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.
தற்கு முன்பு இதேயளவில் கரும்புலிகள் நடவடிக்கைக்குச் சென்றிருந்தாலும், பலர் திரும்பி வந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கிளிநொச்சித் தாக்குதலுக்கு உறுதுணையாக ஆனையிறவுக்குச் சென்ற அணியினரில் சிலர் திரும்பி வந்திருந்தார்கள். 'ஓயாத அலைகள் -3' வன்னியில் தொடங்கியபோது பெருமளவில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலிகள் இழப்புக்கள் ஏதுமின்றித் திரும்பி வந்திருந்தார்கள். பளையிலிருந்த ஆட்லறித் தளத்தை அழிப்பதற்கென 11 பேர் கொண்ட கரும்புலியணி சென்றிருந்தது. வெற்றிகரமாக 11 ஆட்லறிகளைத் தகர்த்தபோதும் இருவர் மட்டுமே களத்தில் இறக்க, மிகுதி ஒன்பதுபேரும் திரும்பி வந்திருந்தனர்.

ஆனால் எல்லாளன் படைநடவடிக்கையில் எவரும் திரும்பிவருவதில்லையென முன்பே முடிபு செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இறக்கும்வரை சண்டைசெய்வதாகவே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. (தற்போது சில 'ஆய்வாளர்கள்' கூறுகிறார்கள், சிலர் தப்பி வந்திருப்பதாக. அதற்கான சாத்தியங்களுள்ளன. ஆனால் அவர்கள் தாக்குதலணியுடன் சென்று வழியனுப்பிய வீரர்களாகவும், வேவு வழிகாட்டிகளாகவுமே இருப்பர். தளத்தினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் திரும்பவில்லையென்பதை உறுதியாகக் கூறலாம்.)

21 பேரைக் கொண்ட தாக்குதலணியை அனுப்புமளவுக்கு இலக்கு மிக முக்கியமானதே. படையிருடன் சண்டைசெய்து இடங்களைக் கைப்பற்றுவதோடு, தொடர்ந்தும் சண்டைசெய்தபடியேதான் விமானங்களைத் தேடித்தேடி அழிக்க வேண்டிய தேவையுமுள்ளது. திட்டமிட்டபடி தாக்குதலணிகள் சரியான இடங்களுக்கு ஊடுருவ முன்னரே எதிரி சண்டையைத் தொடங்கினாலும்கூட எப்படியாவது அவற்றை முறியடித்து இலக்குகள் அழிக்கப்பட வேண்டும். எனவே ஆட்தொகை என்பது இங்கு அதிகமாகத் தேவைப்பட்டுள்ளது.

ஆனால் திரும்பி வருவது பற்றி யோசிக்காமைக்கு இலக்கின் அமைவிடத்தைவிட தற்போதைய களநிலைவரம் தான் முக்கிய காரணம். அமைவிடத்தைப் பொறுத்தவரை, அது வன்னியின் கட்டளைப் பணியகத்திலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள பகுதி. புலிகளின் தென்முனைக் காவலரண் வரிசையிலிருந்து குறுக்காகக் பார்த்தாற்கூட65 அல்லது 70 கிலோமீற்றர்கள் வரை வரும். நகர்வுப் பாதையென்று பார்த்தால் 100 கிலோமீற்றர்கள் வரை வரலாம். ஆனால் இத்தூரமென்பது புலிகளுக்கு இயலாத காரியமன்று. மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை நூற்றுக்கணக்கான புலிகள் பலதடவை நடந்த வரலாறுண்டு. அனுராதபுரத்தில் தாக்குதல் நடத்திய அணிகூட நடந்தேதான் இலக்கை அடைந்தார்கள். எனவே விடிவதற்குள் காட்டுக்குள் புகுந்துகொண்டால் வன்னி வந்துசேர்வது முடியக்கூடிய காரியமே.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, தப்பிவரவேண்டுமானால் வெளிச்சம் வரமுன்பு தளத்தை விட்டு வேளியேறிவிட வேண்டுமென்பது. தாக்குதல் தொடங்கியபின் குறிப்பிட்ட நேரத்துக்குள் முகாமைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு இருக்கும். எனவே தப்பிவருவோர் அந்தச் சுற்றில் சண்டையொன்றை எதிர்கொள்ள நேரிடலாம்.

அடுத்து, தற்போதைய களநிலைவரத்தைக் கவனத்திற் கொண்டால், பெரிய வெற்றியொன்றை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் புலிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகும். அரைகுறையாக இன்றி முழுமையான வெற்றியொன்றை உறுதிப்படுத்த வேண்டும். அண்மைக்காலமாக இராணுவ நோக்கில் ஏற்பட்ட பின்னடைவுகள் மத்தியில் மேலும் ஓர் அரைகுறைத் தாக்குலொன்றை நடத்தி முடிக்க புலிகள் விரும்பவில்லை. மேலும் மிகநீண்டகாலமாகத் தயாரிக்கப்பட்ட, அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஓர் இலக்கை முற்றுமுழுதாக அழிக்க வேண்டிய தேவையுமிருந்தது. தாக்குதல் தொடர்பாக திரு. வே. பிரபாகரன் வெளியிட்டதாக வெளிவந்த கருத்துக்கள் இதனைத் தெளிவாக உணர்த்தும். அத்தோடு இத்தாக்குதலை தலைமை தாங்கிய லெப்.கேணல் இளங்கோவும், லெப்.கேணல் வீமனும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாகக் கடைமையாற்றியவர்கள். தமது நேசிப்புக்கும் நம்பிக்கைக்குமுரிய இருவரை இத்தாக்குதலுக்கென பிரபாரகன் தெரிவு செய்து அனுப்பியிருந்தார். மீளமுடியாத ஓர் இக்கட்டடில் இருந்த போராட்டத்தில் மிகப்பெரும் தடைநீக்கியாக இத்தாக்குதல் விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இனி ஒருபோதும் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வாய்க்கப் போவதில்லை. எனவே பங்குபற்றும் அணியினர் திரும்பி வருவது பற்றிய கவலையின்றி இயலுமானவரை முற்றுழுதாக முகாமைத் தகர்ப்பதென்பதே குறியாய் இருந்தது.

4.
ந்தத் தாக்குதலை ஒரு கூட்டுப்படை நடவடிக்கையாக புலிகள் அறிவித்ததோடு அதை நடத்திக்காட்டியிருக்கிறார்கள். புலிகளின் விமானப்படை சில குண்டுகளை வீசியிருக்கிறது. ஆனால் புலிகளின் விமானப்படை சண்டைக்களத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையென்பதே உண்மை. வவுனியாவிலிருந்து புறப்பட்ட உலங்குவானூர்தியொன்று வீழ்ந்து நொருங்கக் காரணமாக இருந்ததொன்றே தமிழீழ விமானப்படையின் 'எல்லாளன் படைநடவடிக்கை' யின் நேரடிப் பங்களிப்பு.
உண்மையில் இத்தாக்குதலுக்கு விமானப்படையைப் பயன்படுத்தியிருக்க வேண்டிய தேவை புலிகளின் விமானங்கள் "களத்துக்கு வந்த நேரத்தில்" இருக்கவில்லை.

ஆனால் இந்த விமானத்தாக்குலானது கருத்துலகில் மிக்பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. குண்டுவீச வேண்டிய இலக்கில் தமது பாதுகாப்பு முற்றாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் புலிகள் தமது விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதைவிட்டால் இன்னொரு அருமையான சந்தர்ப்பம் கிடைப்பது கடினமே. புலிகளின் விமானப்படைத்திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருதுகோள் பெருமளவானோரிடம் ஏற்பட்டுள்ள நிலையில், தாம் இன்னும் இயங்குதிறனுடன் உள்ளோம் எனக் காட்ட வேண்டிய தேவையும் புலிகளுக்கு இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உண்மையில் தரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் மட்டுமே சிறிலங்காப் படையினருக்குச் சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் பன்னாட்டு ஊடகங்களில் புலிகளின் விமானப்படையின் குண்டுவீச்சே முதன்மைப் படுத்தப்பட்டது. தாக்குதல் தொடங்கியபின் பன்னாட்டுச் செய்திநிறுவனங்கள் வெளியிட்ட முதற்கட்டச் செய்தியில் புலிகளின் விமானப்படை தாக்குதல் நடத்துவதாகவே செய்திகள் வெளியிட்டன. புலிகளின் விமானப்படை குறித்த ஆச்சரியமே முதன்மைப்படுத்தப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்ட விமர்சனங்களும் பெரும்பான்மையானவை புலிகளின் விமான்ப்படை பற்றியதாகவே இருந்தன.

நேரடியாக தாக்குதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் தமது விமானப்படை மூலம் கருத்துலகில் மிகப்பெரிய மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளனர் புலிகள்.

5.
த்தாக்குதல் இடம்பெற்ற காலம் மிக முக்கியமானது. சிறிலங்கா அரசு புலிகளை பலவீனப்படுத்திவிட்டதாகவும், இன்னும் சிலமாதங்களில் அவர்களின் கதை முடிகிறது என்றும் கதைவிட்டுக்கொண்டிருந்த காலத்தில் இது நடந்துள்ளது. ஆனால் இதுதான் காலம் தொடர்பான முக்கிய காரணி என்றில்லை.
வேறுவகையில் இத்தாக்குலின் காலம் முதன்மை பெறுகிறது.
வன்னிமீதான சிறிலங்காப் படைகளின் பெரும் படையெடுப்பொன்றை சிலமாதங்களுக்கு ஒத்திவைத்திருப்பதே இத்தாக்குதலின் காலம் தொடர்பான முக்கிய கூறு.

சிறிலங்காப் படைகளின் முன்னேற்ற முயற்சிப்புக்களும் அவற்றுக்கெதிரான புலிகளின் தற்காப்புத் தாக்குதல்களும் விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் பாதகமானவை. தமது வலு முழுவதையும் தற்காப்புத் தாக்குதல்களிலேயே செலவிட வேண்டியநிலை நிச்சயம் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் பாதகமான விடயம். அதைத் தெரிந்தே புலிகளுக்கு ஓய்வு கொடுக்கவிடாமல் சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளன.
தமது மனித வளத்தையும், ஆயுத பலத்தையும் எதிரியின் முன்னேற்ற முயற்சியை முறியடிப்பதில் செலவிட்டுக்கொண்டிருந்தால், நிலமீட்பு என்ற முயற்சியைச் செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையா இருக்கும். அதுவும் தற்போது சர்வதேசக் கடற்பரப்பில் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னவடைவுகள் களநிலைமையை இன்னும் பாதித்துள்ளது.
தற்போதைய நிலையில் எதிரியின் பாரிய முன்னெடுப்புக்களை முற்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டிய தேவை புலிகளுக்கு அவசரமாக உள்ளது.
'எல்லாளன் படைநடவடிக்கை' அதைச் செவ்வனே செய்துள்ளது.
ஆங்காங்கே வழமையாக படையினர் செய்யும் சில மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை விடுத்து வன்னிமீது பெருமெடுப்பில் ஒரு கூட்டுப்படைநடவடிக்கையை சிறிலங்கா அரசு உடனடியாகச் செய்ய வாய்ப்பில்லை.

இராணுவத்தின் பெரிய முன்னேற்ற நடவடிக்கைகள் அற்றதான ஒரு காலப்பபகுதியைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தக்காலப்பகுதி விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குரிய தாயர்ப்படுத்தற் காலப்பகுதி. இதை எதிரியும் நன்கு உணர்ந்துள்ளான். புலிகளுக்குக் கொடுக்கும் காலஅவகாசம் தமக்குரிய மிகப்பெரிய ஆபத்தென்பதால் அதை எப்பாடு பட்டாவது முறியடிக்க சிறிலங்கா இராணுவமும் அவர்களின் தலைமையும் முயலும்.

சரியான தயார்ப்படுத்தலின்றி அவசரஅவசரமாக படைநடவடிக்கையை சிறிலங்கா அரசு தொடங்கலாம். ஆனால் அப்படி நடந்தால் மிகக்கடுமையான இழப்பை சிங்களப்படைகள் சந்திக்குமென்பது வெளிப்படை.
மகிந்த அரசாங்கம் கட்டிவைத்திருக்கும் மாயை விரைவில் கலையும் காலம் வரும். எந்தவொரு தோல்வியும் தாம் கட்டிவைத்திருக்கும் மாயையை உடைத்துவிடும் என்ற காரணத்தால்தான் இவ்வளவுகாலமும் வன்னிமீதான தமது நடவடிக்கையை மகிந்த சகோதரர்கள் தள்ளிப்போட்டு வந்தனர்.
தலைக்கு மேல வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன என்ற கணக்காக 'அனுராதபுரமே போட்டுதாம், இனியென்ன?' என்ற சலிப்போடு, சிலவேளை மோட்டுத்தனமான முயற்சியொன்றில் மகிந்த சகோதரர்கள் இறங்கக்கூடும்.

எல்லாளன் நடவடிக்கை பற்றி மிகவும் துல்லியமாக ஆய்வு செய்து உங்கள் ஆக்கத்தை எழுதியிருக்கீர்கள்! இவ்விமர்சனத்தை பகிர்ந்துகொண்டதன் மூலம் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது! தொடரட்டும் உங்கள் ஆய்வுகள்!

கீர்த்திகன்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment